சென்னை: சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்தச் சூழலில், வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு மழை பெய்தபோது பல கார்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மக்கள் எடுத்து வருகின்றனர்.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபெங்கல் புயலாக (Cyclone Fengal) மாறியதால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கன மழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை புறநகர்ப் பகுதிகளான மடிப்பாக்கம், ராம் நகர், ஏஜிஎஸ் காலனி, வேளச்சேரி, விஜயநகர், தரமணி, கோவிலம்பாக்கம் பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள், வேளச்சேரி மேம்பாலத்தில் தங்களுடைய கார்களை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், பள்ளிக்கரணை நோக்கிச் செல்லும் ரயில்வே மேம்பாலம், தரமணியில் இருந்து வேளச்சேரி 100 அடி சாலை நோக்கிச் செல்லும் இரு மேம்பாலங்களிலும் பொதுமக்கள் கார்களை நிறுத்தி வருகின்றனர்.
முன்னதாக, கடந்த மாதம் பெய்த கனமழையின்போது இதேபோன்று வேளச்சேரி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தங்கள் கார்களை வேளச்சேரி, மேடவாக்கம் உள்ளிட்ட பாலங்களில் நிறுத்தி வைத்திருந்தது நினைவு கூரத்தக்கது.

