சென்னை: வேளச்சேரி ஏரியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவது தொடர்பாகப் பசுமைத் தீர்ப்பாயத்தில் ஐந்து ஆண்டுகளாக வழக்கு இழுபறியாக இருந்து வருகிறது. இது அதிருப்தி தருவதாகப் பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
“இந்த வழக்குகள், அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் வியாழக்கிழமை (19.12.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் முன்னிலையாகி, வேளச்சேரி ஏரியில் 962 ஆக்கிரமிப்பு வீடுகள், 54 வணிகப் பயன்பாட்டுக் கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
“அவற்றுக்கு மாற்று இடங்கள் வழங்கப் பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாற்று இடம் வழங்குமாறு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
“இந்த வழக்கு 2020ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாக இழுபறியாக உள்ளது,” என அமர்வின் உறுப்பினர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இந்த வழக்கின் தொடர்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையில், “வேளச்சேரி ஏரியைச் சீரமைப்பது தொடர்பாகத் தலைமைச் செயலர் தலைமையில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், சிஎம்டிஏ சார்பில் ரூ.23 கோடியே 50 லட்சத்தில் ஆழப்படுத்தி சீரமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது,” எனக் கூறப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து அடுத்த விசாரணையின்போது அறிக்கை தாக்கல் செய்வதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் உறுதியளித்துள்ளார். அதைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜன.30ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.