சென்னை: இந்தியாவின் மத்திய அரசு சனிக்கிழமை (பிப்ரவரி 1) தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்டத்தில் தமிழக ரயில்வேக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை சென்ட்ரலில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின் குமார், சென்னை கோட்ட மேலாளர் சைலேந்திர சிங், தெற்கு ரயில்வே நிர்வாகத் தலைமை அதிகாரி சுஷில் குமார் மௌரியா ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.
“தமிழக ரயில்வே திட்டங்களுக்குக் கடந்த மத்திய வரவுசெலவுத் திட்டத்தில் ரூ.6,331 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போதைய வரவுசெலவுத் திட்டத்தில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.7,611 கோடியும் கேரள ரயில்வே திட்டங்களுக்கு ரூ.3,795 கோடியும் என மொத்தம் ரூ.11,406 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு புதிய மற்றும் அகலப்பாதை திட்டங்களுக்கும் ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
“தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கான நிலத்தைக் கையகப்படுத்திட, தமிழக அரசிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ரயில் தண்டவாளங்களில் தலா இரண்டு நடைமேடைகள் என மாற்றப்பட்டு படிப்படியாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் தண்டவாளம், நடைமேடை பணிகள் மே மாதத்துக்குள் முடிக்கப்படும்.
“அதன்பின், தாம்பரத்துக்கு மாற்றப்பட்ட விரைவு ரயில்களை மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே தொடங்கி நிறுத்தப்பட்ட கூடுவாஞ்சேரி- ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம் - கடலூர் ஆகிய ரயில் பாதை பணிகள் மீண்டும் தொடங்க பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
“கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகளில் ரயில்வே துறை சார்ந்த பணிகள் முடிந்துள்ளன. ஆனால், ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்துக்கான அணுகுசாலை, நடைமேம்பாலம் உள்ளிட்ட மாநில அரசு சார்ந்த பணிகள் நடைபெறவேண்டியுள்ளன. அந்தப் பணிகள் நிறைவடைந்ததும், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். மார்ச் மாதத்துக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
“வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. தெற்கு ரயில்வே சார்பில் ரயில்வே பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இந்த மாதம் ரயில் வழித்தடத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட உள்ளது,” என்று அவர்கள் கூறினர்.

