அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு

2 mins read
d4540415-4e7c-4fb4-bbb4-d065f77525db
குற்றவாளிகளை காவல்துறை அதிகாரிகளால் சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். - படம்: ஊடகம்

சென்னை: கும்மிடிப்பூண்டி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுகவின் முன்னாள் அமைச்சருமான சுதர்சனம், 20 ஆண்டுகளுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் நவம்பர் 21ம் தேதி சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

அதன்படி, ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த பவாரியா கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்த ராகேஷ், அசோக், ஜெகதீஷ் ஆகிய 3 கொள்ளையர்களை குற்றவாளிகள் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இவர்கள் மூவரும் கடந்த 20 ஆண்டு காலமாகப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2001-06 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் சிறிதுகாலம் அமைச்சராகப் பதவி வகித்த கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் சுதர்சனம், பெரியபாளையம் அருகே உள்ள தானாக்குளத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

கடந்த 2005 ஜனவரி 9 ஆம் தேதி நள்ளிரவில், இவரது வீட்டுக்குள் புகுந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் சுதர்சனத்தைக் சுட்டுக் கொன்றுவிட்டு, வீட்டில் இருந்தவர்களைத் தாக்கி நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

அது தொடர்பாக, பவாரியா கொள்ளையர்களான ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ், ராகேஷ் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அசோக், ஜெயில்தார் சிங் மற்றும் 3 பெண்கள் உள்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

புழல் சிறையில் இருந்த ஓம் பிரகாஷ் உள்ளிட்ட இருவர், வழக்கு விசாரணையின்போது இறந்து விட்டனர். பிணையில் விடுவிக்கப்பட்ட மூன்று பெண்கள் தலை மறைவாகினர். எஞ்சிய ஜெகதீஷ் உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கு விசாரணை சென்னை 15வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையிலிருந்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆபிரகாம் லிங்கன் முன்பாக நடந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்கள் ஜி.சீனிவாசன், மகாராஜன் ஆகியோர் வாதிட்டனர். இந்த வழக்கில் 84 பேர் சாட்சியம் அளித்தனர். நூற்றுக்குமேற்பட்ட சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் நவம்பர் 24ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ஆபிரகாம் தெரிவித்தார். அதேபோல இந்த வழக்கில், பிணையில் விடுவிக்கப்பட்ட ஜெயில்தார் சிங்கும் நீதிமன்றத்தில் முன்னிலையானார். அவர்மீதான தீர்ப்பும் அதே தேதியில் அறிவிக்கப்படும் என நீதிபதி கூறினார்.

குறிப்புச் சொற்கள்