கோவையில் 1,100 கோழிப் பண்ணைகளில் கால்நடை மருத்துவர்கள் ஆய்வு

கோவையில் 1,100 கோழிப் பண்ணைகளில் கால்நடை மருத்துவர்கள் ஆய்வு

படம்: மாலை மலர்

19 Nov 2026 - 4:29 pm

1 mins read

கோவை: கடலூர் மாவட்டத்தில் பரவிய பறவைக் காய்ச்சலைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் உள்ள ஏறக்குறைய 1,100 கோழிப் பண்ணைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன், கடலூர் மாவட்டப் பண்ணைகளிலுள்ள கோழிகளுக்குப் பறவைக் காய்ச்சல் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, கால்நடைப் பராமரிப்புத் துறை அதிகாரிகள் கோழிகளின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்விற்கு அனுப்பினர். ஆய்வில் ‘எச்5என்1’ (H5N1) வகைக் காய்ச்சல் பரவியிருப்பது உறுதியானது.

அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் இருந்து மூன்று கிலோமீட்டர் சுற்றளவிலிருந்த கோழிகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

இதன் எதிரொலியாக, கோவை மாவட்டத்தின் 12 ஒன்றியங்களிலுள்ள சுமார் 1,100 கோழிப் பண்ணைகளில் தற்போது ஆய்வு நடைபெறுகிறது. கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையிலான குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

“கோவை மாவட்டத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் தாக்கம் இல்லை. இருப்பினும், பண்ணைகளைத் தொடர்ந்து கண்காணிப்பதோடு மருத்துவக் குழுவினரும் தயார்நிலையில் உள்ளனர்,” என்று கோவை மாவட்டக் கால்நடைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

“பண்ணைகளில் கோழிகள் திடீரென உயிரிழந்தால் தகவல் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகவல் கிடைத்தால், கோவையிலுள்ள கால்நடை நோய்ப் புலனாய்வுப் பிரிவினர் மூலம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுசெய்யப்படும்,” என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்