சென்னை: துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பாகத் தமிழக அரசுடன் எந்தவித அதிகார மோதலும் இல்லை என அம்மாநில ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
அதில் துணை அதிபர் ஜகதீப் தன்கர் பங்கேற்பார் எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ஆளுநர் மாளிகையின் அந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாகத் தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் துணைவேந்தர்கள் மாநாடு குறித்து சில ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. ஊடகங்களின் சில அறிக்கைகள், மாநில அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே அதிகார மோதல் இருப்பதுபோல காட்டுகின்றன. இந்த அறிக்கைகள் முற்றிலும் தவறானவை,” எனக் கூறியுள்ளது.
மேலும், “உயர்கல்வி நிறுவனங்களின் துணை வேந்தர்கள் கலந்துகொள்ளும் அம்மாநாட்டில், தங்களுடைய கருத்துகளையும் அனுபவங்களையும் கல்வி நிறுவனத் தலைவர்கள் பகிர்ந்து வருகின்றனர். 2022ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் தமிழக ஆளுநர் தலைமையில் அம்மாநாடு நடந்து வருகிறது.
முன்னதாக, தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் குறிப்பாக மாநில பல்கலைக்கழகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி இருந்ததாகவும் இந்த மாநாடுதான் அனைத்து கல்வி நிறுவனங்களையும் ஒன்றிணைத்ததாகவும் அதில் ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது.
“கற்றல், கற்பித்தல், புதுமை என கல்வி நிறுவனங்கள் சிறந்து விளங்கும் நோக்கில் நடைபெறும் இந்த துணைவேந்தர் மாநாடு குறித்து அரசியல்நோக்கில் சில தவறான தகவல்கள் வருகின்றன. அவை அவதூறானவை,” என்றும் அதில் தெரிவித்துள்ளது.