சென்னை: தமிழக அரசின் கடும் எதிர்ப்பை மீறி, ஆளுநர் ரவி துணைவேந்தர் மாநாட்டை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தால் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடக்கத்தில் இருந்தே சுமுக உறவு நிலவவில்லை. அரசின் செயல்பாடுகளில் அவர் தலையிடுவதாக ஆளும் திமுக தரப்பு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.
குறிப்பாக, பல்கலைக்கழக வேந்தர்கள் நியமனம் தொடர்பாக ஆளுநர் முன்பு தெரிவித்த கருத்துகளுக்கு முதல்வர் ஸ்டாலினும் தமிழக அமைச்சர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது தமிழக அரசு. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்ட 10 சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆளுநர் ரவி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை உதகையில் நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்.
ஏப்ரல் 25 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ள இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராகத் துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்க உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, வேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஆளுநர் ரவி, துணைவேந்தர்கள் கூட்டத்தை எப்படிக் கூட்டலாம் எனக் கேள்வி எழுந்துள்ளது. எனவே, ஆளுநரின் அழைப்பை துணைவேந்தர்கள் முற்றாகப் புறக்கணிக்க வேண்டுமென அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருந்தது சட்டவிரோதம் எனக் கூறியதும் சட்டவிரோதச் செயலைச் செய்த ஆளுநர் பதவி விலகியிருக்க வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தமிழ்நாடு அரசு கடிவாளம் போட்டிருக்கிறது என்றும் இந்தப் பேரிடியைத் தாங்கிக்கொள்ள முடியாத ஆளுநர், துணைவேந்தர்களின் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து புதிதாக ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளார் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, ஆளுநர் மாளிகை கொடுத்துள்ள விளக்கத்தில், “உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆளுநர் ரவி துணை வேந்தர்களைப் புதிதாக நியமிக்க மட்டுமே முடியாது. இருந்தபோதும் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் ரவியே தொடர்கிறார்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.