சென்னை: இரு தொகுதி இடைத்தேர்தல்களில் தவெக பெற்ற வெற்றி, மக்களுக்கும் அரசியல் கண்ணியத்திற்கும் கிடைத்த வெற்றி என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் (தவெக) வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து, சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
வெற்றிக்குப் பின், கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ், நிர்மல்குமார், அருண்ராஜ் ஆகியோர் தவெக தலைவர் விஜயைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது, நிர்வாகிகளுடன் இணைந்து விஜய் தனது தனித்துவமான பாணியில் உடல் மொழியை வெளிப்படுத்தி, வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.
இது தொடர்பான புகைப்படங்களை தவெகவினர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
விஜய் பதிவு
இந்நிலையில், வாக்காளர்களுக்குப் பணமோ அல்லது எவ்விதப் பரிசுப்பொருள்களோ வழங்காமல் தவெக இந்த நேர்மையான வெற்றியைப் பெற்றுள்ளதாக முதல்வர் விஜய் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் என்பது ஊழல்வாதிகளின் கையில் இல்லை, மாறாக மக்கள் சக்தியின் கோட்டை என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் மீண்டும் நிரூபித்துள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் அறிக்கை
நடந்து முடிந்த இடைத்தேர்தலில் திமுகவைப் பொறுத்தவரை தோல்வியில் வெற்றி, தவெகவுக்கு வெற்றியில் தோல்வி கிடைத்துள்ளதாகத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
