தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிகழ்வில் பல உணர்ச்சிகரமான, நெகிழ்ச்சியான சம்பவங்கள் அரங்கேறின.
தமிழ்நாடு 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணியும் தவெக, நாதக ஆகியவை தனித்தும் களம் காண்கின்றன.
தவெக சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 234 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் களம் இறங்குகிறார்.
என்.ஆனந்த் (பொதுச்செயலாளர்): சென்னை தி.நகர் தொகுதி, ஆதவ் அர்ஜுனா: வில்லிவாக்கம் தொகுதி, செங்கோட்டையன்: கோபிச்செட்டிபாளையம், சி.டி.ஆர். நிர்மல்குமார்: திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும் போட்டியிட உள்ளனர்.
மாற்றுக்கட்சிகளில் இருந்து இணைந்தவர்களுக்கும் முக்கிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வி.எஸ். பாபு (கொளத்தூர்), செல்வம் (சேப்பாக்கம்), ஜே.சி.டி. பிரபாகர் (ஆயிரம் விளக்கு) ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ‘விசுவாசம்’
இந்த நிகழ்வின் உச்சகட்டமாக, விருகம்பாக்கம் தொகுதிக்கான வேட்பாளராக சபரிநாதன் என்பவரது பெயர் அறிவிக்கப்பட்டது. இவர் விஜய்யிடம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளராகப் பணிபுரிந்து வரும் ராஜேந்திரனின் மகன் ஆவார்.
தன்னிடம் பல ஆண்டுகளாக விசுவாசமாகப் பணியாற்றி வரும் ராஜேந்திரன் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக, அவரது மகனுக்கு விஜய் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத சபரிநாதன், தனது தந்தையுடன் மேடைக்குச் சென்றபோது ஆனந்தக் கண்ணீர் விட்டார். இதைக் கண்டு நெகிழ்ந்த விஜய், மேடையிலேயே சபரிநாதனின் கண்ணீரைத் துடைத்துவிட்டு அவரைத் தேற்றினார்.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல், ராயபுரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விஜய் தாமு, மேடையிலேயே விஜய்யின் காலில் விழுந்து தனது நன்றியைத் தெரிவித்தார். இந்தச் சம்பவங்கள் தவெக தொண்டர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.

