தமிழக பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், திமுக கட்சி தொண்டர் ஒருவர்மீது கல் வீசுவதைக் காட்டும் காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
புதன்கிழமை (ஜனவரி 25) மொழிப்போர் தியாகிகளுக்காக திருவள்ளூரில் நடைபெறும் 'வீர வணக்கம் நாள்' பொதுக்கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார்.
நிகழ்ச்சிக்கு மேடை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தாமும் மற்ற பிரமுகர்களும் அமர்வதற்கு நாற்காலிகளை எடுத்து வருமாறு அந்தக் கட்சித் தொண்டரிடம் திரு நாசர் கூறினார்.
நாற்காலிகளை எடுத்து வருவதில் அந்தத் தொண்டருக்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த திரு நாசர், தாம் நின்ற இடத்தில் இருந்து கல்லை எடுத்தார். திரு நாசருடன் இருந்த திமுக பிரமுகர்கள் சிலர் பின்னணியில் சிரிப்பதைக் காணொளியில் கேட்க முடிந்தது.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்நிலையில், அமைச்சரின் நடத்தையை எதிர்க்கட்சிகள் விமர்சித்து உள்ளன. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "இந்திய வரலாற்றில் அமைச்சர் ஒருவர் மக்கள்மீது கற்களை வீசுவதை யாராவது பார்த்ததுண்டா?" என்று டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

