விஜய், அன்வார் சந்திப்பு தள்ளிவைப்பு: மலேசிய அமைச்சர் விளக்கம்

விஜய், அன்வார் சந்திப்பு தள்ளிவைப்பு: மலேசிய அமைச்சர் விளக்கம்

1 mins read
e539e3e1-7e8c-45e4-b2c3-fabe84c6e16c
அன்வார் இப்ராகிம், விஜய். - படங்கள்: தி ஸ்டார்

புதுடெல்லி: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், தமிழக முதல்வர் விஜய் இடையே திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு, இரு தலைவர்களின் பணிச்சுமை, காலநேர நெருக்கடி காரணமாக நடைபெறவில்லை என்று மலேசிய மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

18வது பிரிக்ஸ் தலைவர்கள் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள மலேசியப் பிரதமரின் தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர் ரமணன், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை உறுதிப்படுத்தினார்.

“இரு தலைவர்களுக்கும் இடையே வேறு எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை. இரு தரப்பிலும் இறுக்கமாக அமைந்த பயணத் திட்டங்கள், கால அட்டவணை மட்டுமே சந்திப்பு தள்ளிப்போனதற்கு முக்கியக் காரணம். இந்த விவகாரத்தை இதன் அடிப்படையில் மட்டுமே பார்க்க வேண்டும்,” என அவர் தெளிவுபடுத்தினார்.

இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து, மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கேரளாவுக்கும் அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 14 முதல் 15 வரை மாலத்த்தீவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்கிறார்.

அன்வார், மோடி சந்திப்பு

இதனிடையே, புதுடெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது, எரிசக்தி, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபிரதமர்அன்வார் இப்ராகிம்முதல்வர்விஜய்சந்திப்புபிரிக்ஸ்