சென்னை: தன் வாழ்க்கையில் இது போன்ற சூழ்நிலையைச் சந்தித்ததில்லை என்று கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் காணொளி வெளியிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) இரவு கரூரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
அதைத்தொடர்ந்து மூன்று நாள்கள் கழித்து விஜய் காணொளி வெளியிட்டுள்ளார்.
ஐந்து மாவட்டங்களில் பிரசாரம் நடந்தபோது நடக்காத ஒரு சம்பவம் கரூரில் மட்டும் ஏன் நடக்கிறது என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
“மனம் முழுக்க வலி இருக்கிறது. ஏற்கெனவே சில மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தோம். அங்கெல்லாம் நடக்காமல் கரூரில் மட்டும் ஏன் நடக்கிறது. மக்களுக்குத் தெரியும் விரைவில் எல்லா உண்மைகளும் வெளியே வரும்,” என்று விஜய் காணொளியில் கூறியுள்ளார்.
“முதல்வர் ஸ்டாலினுக்கு கோபம் இருந்தாலோ பழி வாங்கும் எண்ணம் இருந்தாலோ என்னைத் தண்டியுங்கள். இனி மக்கள் பாதுகாப்பே முக்கியம். எனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாகத் தொடரும்” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.