திருநெல்வேலி: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சினிமாவில் பேசுவது போலவே அரசியல் மேடைகளிலும் பேசுவதாகத் தமிழகச் சட்டமன்றச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் அவ்வாறு கூறினார்.
“முதல்வர், பிரதமர் போன்றோரைக் குறித்துப் பேசும்போது கண்ணியமாகப் பேசவேண்டும்,” என்றார் அவர்.
மேலும், “பின்புலத்தில் அமித் ஷா, பாரதிய ஜனதா கட்சி இருக்கும் துணிச்சலில் விஜய் அகந்தையோடு பேசுகிறார். மத்திய அரசே சிலரைப் புதுக் கட்சி தொடங்க வைத்து, ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறது. விஜய் சினிமாவில் பேசுவது போலவே பேசுகிறார். இத்தகைய அகந்தை இருக்கக் கூடாது,” என்று திரு அப்பாவு சாடினார்.
“ஒய் பாதுகாப்பு கேட்காமலே கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். நான் ஒரு பிரசாரத்திற்கு வந்தால் இவ்வளவு நிபந்தனை போடுகிறீர்கள். பிரதமரோ உள்துறை அமைச்சரோ பிரசாரத்திற்கு வந்தால் இப்படி நிபந்தனை போடுவீர்களா? முதல்வருக்குப் போட்டுப் பாருங்களேன்,” என்று விஜய் சொல்வதிலிருந்தே அவர்கள்தான் பின்னணியிலிருந்து இயக்குகிறார்கள் என்பது தெரிகிறது.
“விஜய்க்கு அரசியலில் அரிச்சுவடி தெரியாது என்று நினைக்கிறேன். அவர் சிறுபிள்ளைத்தனமாகப் பேசுகிறார். இதை மக்கள் விரும்பவில்லை,” என்றார் திரு அப்பாவு.