மதுரையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார் விஜய்

மதுரையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார் விஜய்

படம்: இந்து தமிழ் திசை

28 Sep 2026 - 5:16 pm

1 mins read

மதுரை: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், குழந்தைகளுக்கான ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ என்ற புதிய நலத்திட்டத்தை முதல்வர் விஜய் மதுரையில் திங்கட்கிழமை (செப்டம்பர் 28) முறைப்படி தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக, அவர் மதுரை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், பிறந்த குழந்தைகளுக்குத் தனது கையால் ஒரு கிராம் தங்க மோதிரத்தை அணிவித்தார்.

முன்னதாக, சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்த முதல்வர் விஜய்க்கு, வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழா மேடையில் பேசிய தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், சித்திரைத் திருவிழாவில் தங்கைக்காக அண்ணன் சீர் சுமந்துவரும் பாசப்பூமியான மதுரையில் இத்திட்டம் தொடங்கப்படுவது மிகவும் பொருத்தமானது எனக் குறிப்பிட்டார்.

மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பிரசவம் முடிந்து வீடு திரும்பும்போது இந்தத் தங்க மோதிரங்கள் வழங்கப்படும்.

இத்திட்டத்திற்காக முதல்கட்டமாக 128,499 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதுடன், ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழாவைத் தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தையும் முதல்வர் விஜய் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

குறிப்புச் சொற்கள்