சிங்கப்பெண் அதிரடிப்படையைத் தொடங்கிவைத்தார் முதல்வர் விஜய்

சிங்கப்பெண் அதிரடிப்படையைத் தொடங்கிவைத்தார் முதல்வர் விஜய்

2 mins read
1ac991ab-1e56-4e30-9f0e-eea23dc8642f
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கான இலச்சினையை முதல்வர் விஜய் வெளியிட, அதை அதிரடிப்படையின் ஐஜி பவானீஸ்வரி பெற்றுக்கொண்டார். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: பெண்கள், சிறார்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைத் தமிழக அரசு அமைத்துள்ளது.

அந்தப் படையின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மாலை சென்னையில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் விஜய், பெண்கள் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றார்.

பெண்களுக்குத் தொல்லை கொடுத்துவிட்டுத் தப்பித்துவிடலாம் என்று நினைத்தால் அது நடக்காது என்று அவர் எச்சரிக்கையும் விடுத்தார்.

“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க போதைப்பொருள் புழக்கம்தான் முக்கியக் காரணம். எனவே, போதைப்பொருள் புழக்கத்தை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்,” என்றார் அவர்.

“போதைப்பொருள் புழக்கம், பெண்​களுக்கு எதி​ரான கொடுமை​கள், சட்​டம் ஒழுங்கு பிரச்​சினை இந்த மூன்​றும் ஒன்​றோடு ஒன்று தொடர்​புடைய​வை. இதை எப்​படிச் சரிசெய்யப் போகிறோம் என்​பது​தான் முக்​கி​யம். அதே நேரம், பெண்​கள், பெண் குழந்​தைகளுக்​கான பாது​காப்பு என்​பது சட்​டம் ஒழுங்கு தொடர்புடையது மட்​டும்​ இல்​லை. இதில் சமூக ஒழுங்​குகிற்கும் தனிமனித ஒழுங்​கிற்கும் தொடர்பிருக்கிறது. எனவே, தனிமனிதன் ஒழுக்​க​மாக இருந்​தாலே போதும், சமூகம் தன்​னாலே மாறும். கட்​டுப்​பாட்​டோடு, பொறுப்​பாக இருந்​தாலே பல பிரச்​சினை​களைக் கட்​டுப்​படுத்​தலாம்.

“படிக்​கும் இடங்​கள், வேலை செய்​யும் இடங்​கள், பயணங்​களின்போது அன்றாட வாழ்க்​கை​யில் அச்சமின்றிப் பெண்​கள் மதிப்போடு வாழும் சூழலை உரு​வாக்க வேண்​டும். அது​தான் நமது முதல் குறிக்​கோள்,” என்றார் முதல்வர் விஜய்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தமது அரசு கிஞ்சித்தும் சகித்துக்கொள்ளாது என்றும் அத்தகைய குற்றங்களுக்கு எதிராக காவல்துறை மிக வேகமாக நடவடிக்கை எடுத்து, வழக்குகளையும் வேகப்படுத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தரும் என்றும் முதல்வர் விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அதேசமயம், நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது என்பதிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

சிங்கப்பெண் சிறப்புப் படைக்கென ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் புதிதாக 2,500 பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தத் தொடக்க விழாவில் சிங்கப்பெண் அதிரடிப்படைக்காக சிறப்பு ‘ஜீப்’, இலச்சினை ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன.

இதனிடையே, சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளதைப் பலரும் வரவேற்றுள்ளனர். புதிய அதிரடிப்படைக்காக 2,500 பணியிடங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.

குறிப்புச் சொற்கள்