புதுக்கோட்டை: மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியைச் (பாஜக) சேர்ந்தவர்கள் மட்டுமே கையெழுத்திடுவார்கள் என்றும் மாணவ-மாணவிகள், தமிழ்ப்பற்று உள்ளவர்கள் யாரும் கையெழுத்திட மாட்டார்கள் என்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
மத்திய அரசின் கையில் அமலாக்கத்துறை உள்ளது, அதனால் யார் மீது வேண்டுமானாலும் ஏவி விடலாம் என்றும் திரு ரகுபதி சாடினார்.
எந்த சோதனைகளையும் நடத்தலாம், இதற்குத் தக்க பதிலை நீதிமன்றத்திலே நிரூபிக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையின் சோதனையை பற்றி கேட்கப்பட்டபோது, அது மத்திய அரசின் பழி வாங்கும் செயலாக எடுத்துக்கொள்ளலாம் என்றார் ரகுபதி. சிலரை குறிப்பிட்டு, அவர்களது வளர்ச்சியை தடுப்பதற்காக இதுபோன்ற சதிச் செயல்களில் ஈடுபடலாம் என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், நடிகர் விஜய்யை தாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டதில்லை என்றும் திரு ரகுபதி கூறினார். சிறுபான்மையின மக்களைக் கவர்வதற்காக நடிகர் விஜய் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறப்பட்டது; அதற்குப் பதிலளித்தஅமைச்சர் ரகுபதி, சிறுபான்மையின மக்களை யாரும் ஏமாற்ற முடியாது என்று எடுத்துரைத்தார்.

