விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) மாலை நடக்கவிருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக (தவெக) மாநாட்டுக்கு அதிகாலையிலிருந்தே தொண்டர்கள் வரத் தொடங்கினர்.
தவெகவின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தவுள்ளார். கட்சியின் முதல் மாநாட்டில் விஜய் என்ன பேசுவார் எனத் தொண்டர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில்தான் தனது கட்சியின் கொள்கை, அடுத்தக்கட்டத் திட்டம் குறித்து தகவல் வெளியிடப்படும் என்று தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்தபோது விஜய் கூறியிருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு மாநாடு தொடங்கவிருக்கிறது. அதற்குப் பல மணிநேரம் முன்பிருந்தே மாநாடு நடக்கவுள்ள திடலில் தொண்டர்கள் குவிந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) போன்ற கட்சிகளில் இருந்தோர்கூட இப்போது தவெகவில் சேர்ந்துள்ளனர் என்று தினமலர் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராத குறையை அவரைவிட இளையரான விஜய் தீர்த்துவைத்துள்ளார் என்று ஒருசிலர் கூறியதாகவும் தினமலரில் குறிப்பிடப்பட்டது.
‘தளபதி’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விஜய் தனது அரசியல் பயணத்துக்ககான ஏற்பாடுகளைச் செய்து வந்தார். இயக்குநர் எச். வினோத் இயக்கும் தனது அடுத்த படத்துக்குப் பிறகு தான் திரையுலகிலிருந்து ஓய்வுபெறப்போவதான அறிவித்தார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருந்த ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Greatest of All Time - கோட்) சென்ற மாதம் வெளியாகி ரசகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது.