விஜய் கட்சியின் முதல் மாநாடு தள்ளிப்போக வாய்ப்பு; தொண்டர்கள் அதிர்ச்சி

1 mins read
9359335b-086a-499c-b17a-82392f47a721
விஜய். - படம்: ஊடகம்

சென்னை: நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் தேதி தள்ளி வைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

இந்த மாநாட்டுக்காக காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. இதன் காரணமாகவே மாநாட்டை தள்ளி வைப்பது குறித்து விஜய் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தனது கட்சியின் முதல் மாநாட்டை செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடத்துவதாக அறிவித்திருந்தார் விஜய்.

இதையடுத்து காவல்துறை சார்பில் மாநாடு தொடர்பாக 21 கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு உரிய பதில்கள் அளிக்கப்பட்டதை அடுத்து, 33 நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி அளித்தது.

முக்கியமாக, மாநாட்டில் 50,000 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் அதற்கான பாதுகாப்பை மட்டுமே அளிக்க முடியும் என்றும் காவல்துறை முக்கிய நிபந்தனையாக தெரிவித்திருந்தது.

இவற்றுள் பல நிபந்தனைகள் தமிழக வெற்றிக் கழக கட்சி நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது என்றும் அதன் காரணமாகவே மாநாட்டுக்கான எந்த பணிகளையும் அவர்கள் தொடங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, முதல் மாநாட்டை அக்டோபர் மாதம் நடத்த விஜய் விரும்புவதாகவும் அச்சமயம் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்பதால் ஜனவரி மாதம் மாநாட்டை நடத்தலாமா என்ற யோசனையில் அவர் இருப்பதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

எனவே திட்டமிட்டபடி மாநாடு 23ஆம் தேதி நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து விஜய் மிக விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்