தருமபுரி: தேமுதிக இளையரணிச் செயலாளராக காலஞ்சென்ற விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக தலைமைச் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நேற்று (ஏப்ரல் 30) தருமபுரியில் நடைபெற்றது. இதில் பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சியின் இளையரணிச் செயலாளராக விஜய பிரபாகர் நியமிக்கப்படுவதாகவும் அவருக்கு கழக நிர்வாகிகள் அனைவரும்
முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரேமலதா கேட்டுக் கொண்டுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக தலைமையில் கூட்டணிகள் அமைக்கப்பட்டு பல கட்சிகள் இரு அணிகளாகப் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.
கடந்த முறை பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தேமுதிக, இம்முறை தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.
இத்தகைய சூழலில் கட்சியின்பால் இளையர்களை ஈர்க்கும்விதமாக விஜய பிரபாகரன் இளையரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.