அம்மாவுக்கு அறுவை சிகிச்சை, தங்கையின் திருமணத்திற்கு உதவிய விஜய் சேதுபதி: மணிகண்டன் நெகிழ்ச்சி

2 mins read
8f558c9e-185f-440c-a81e-73a70eb2e665
நடிகர்கள் விஜய் சேதுபதி, மணிகண்டன். - படங்கள்: ஊடகம்

‘குடும்பஸ்தன்’ திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கியுள்ளது. இப்படத்தின் நாயகன் மணிகண்டன் ‘ஜெய் பீம்’, ‘குட் நைட்’ என அடுத் தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து உற்சாகமாய் வலம் வருகிறார்.

இந்நிலையில், விஜய் சேதிபதி தமக்கு பல வகையில் உதவிகள் செய்துள்ளதாக ஒரு பேட்டியில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் மணிகண்டன்.

இவர், ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். படப்பிடிப்பின்போது ஒரு நாள் நல்ல மழை பெய்துள்ளது. அப்போது உடன் நடித்த எல்லாரும் அங்கிருந்த சில கூடாரங்களின்கீழ் ஒதுங்கி விட்டனராம்.

“நான் மட்டும் தனியாக ஓரிடத்தில் ஒதுங்கி நின்றேன். அப்போது விஜய் சேதுபதியின் கேரவேன் தூரத்தில் இருந்ததால் அவரும் என்னுடன் சேர்ந்து கொண்டார். இருவரும் சுமார் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். என் தாயாருக்கு அறுவை சிகிச்சை செய்ய பணம் தேவைப்படுவதாக பேச்சுவாக்கில் கூறினேன்.

“அன்று படப்பிடிப்பு முடிந்ததும் திடீரென என்னையும் காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பிய அவர், ‘உங்கள் தாயார் சிகிச்சை பெறும் மருத்துவமனை எங்கே இருக்கிறது. நாம் அங்கேதான் போகிறோம்’ என்றார்.

“பின்னர், மருத்துவச் செலவு முழுவதையும் அவரே ஏற்றுக்கொண்டார். அதேபோல் என் சகோதரியின் திருமணத்துக்கு விஜய் சேதுபதியை முறைப்படி அழைக்கவில்லை.

“திருமணத்தன்று எல்லாம் முடிந்து வீட்டுக்கு கிளம்பும் வேளையில் திடீரெனத் தொடர்புகொண்டு பேசினார். திருமணம் எங்கே நடக்கிறது என்று அவர் கேட்டபோது, திருமணம் முடிந்துவிட்டது என்று சங்கடத்துடன் கூறினேன்.

“அவரோ, ‘பரவாயில்லை’ எனக் கூறி, அடுத்த இருபது நிமிடங்களில் நேரில் வந்துவிட்டார். பின்னர் மணமக்களை வாழ்த்திய அவர், வேண்டாம் என்று நான் எவ்வளவோ மறுத்தும்கூட என் கையில் மூன்று லட்சம் ரூபாய் பணத்தை திணித்துவிட்டுச் சென்றார்.

திருமணச் செலவுகளை ஈடுகட்டிய பின்னர், கையில் அன்று மாலை எழுநூறு ரூபாய் மட்டுமே இருந்தது. விஜய் சேதுபதி இருமுறை செய்த இந்த உதவியை மறக்கவே இயலாது,” என்று மணிகண்டன் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்