தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகம் எங்கும் தவெக தலைவர் விஜய் விரைவில் சுற்றுப்பயணம்

2 mins read
8b7d106b-1225-48a2-af99-41d130127bd2
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.  - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழக மாவட்டங்கள்தோறும் தனது கட்சிக்கான நிர்வாகிகளை நியமித்த பின்னர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோவையில் இருந்து சுற்றுப்பயணத்தைத் தொடங்கி, நெல்லையில் முடிக்கவும் திட்டமிடப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்காகத் தனது கட்சியை அனைத்து நிலைகளிலும் பலப்படுத்தும் பணியையும் அவர் தொடங்கி உள்ளார்.

எந்தவொரு கட்சிக்கும் கட்டமைப்பு என்பது மிக முக்கியமானது என்பதால், விரைவில் தமிழக மாவட்டங்கள் அனைத்திலும் தனது கட்சிக்கான புதிய நிர்வாகிகளை நியமிக்க விஜய் திட்டமிட்டு உள்ளார்.

ஏற்கெனவே மாநாட்டுப் பணியின் நிமித்தம் பல்வேறு அணிகளை விஜய் அமைத்திருந்தார்.

அந்த அணிகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு புதிய பொறுப்புகளை விஜய் வழங்க இருக்கிறார். அதன்படி மாவட்ட, வட்ட, ஒன்றிய, கிளைச் செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

தேரதல் பணிக்காக இப்போதே ஒரு வாக்குச்சாவடிக்கு 10 பொறுப்பாளர்கள் வீதம் நியமித்து பணிகளைத் தொடங்கவும் விஜய் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிர்வாகிகளை நியமித்த பின்னர், இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் ‘தளபதி 69’ என்ற புதிய படத்திலும் நடித்து முடித்துவிட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிற கட்சிகளைச் சேர்ந்தோர் சிலரும் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையும் நிகழ்வும் நடத்தப்பட்டு வருகிறது.

மக்கள் சந்திப்புக்காக விஜய்க்கு சிறப்பு வசதிகளுடன் வாகனம் தயாராகி வரும் நிலையில், அந்த வாகனத்திலேயே அவர் மக்களைச் சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கான பயண விவரம் குறித்த பணிகள் தயாராகி வருகின்றன.

இதன்படி கோவை, மதுரை, திருச்சி, நெல்லை என மண்டல வாரியாக பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளை அடுத்த மாதம் பனையூர் தலைமை அலுவலகத்தில் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

விஜய் சுற்றுப்பயணத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு நாள்களுக்கு அங்கேயே தங்கியிருந்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெகவின் முதல் அரசியல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது.

இம்மாநாட்டைத் தொடர்ந்து 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தவெக தயாராகி வருகிறது.

அதற்கேற்ப கூட்டணி ஆட்சி, அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் தேர்தல் அரசியலுக்கு வியூகம் வகுத்துள்ள விஜய், கூட்டணிக்கான வாசல் கதவையும் திறந்து வைத்துள்ளார்.

திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகளில் உள்ள கட்சிகளை இழுக்கவும் எந்தக் கூட்டணியிலும் இல்லாத கட்சிகளை தனது கட்சியுடன் இணைத்துக் கொள்ளவும் தற்போது தவெக வட்டாரத்தினர் முயற்சி எடுத்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்