சென்னை: வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்கு வைத்து அரசியல் நடவடிக்கைகள் மெல்ல மெல்ல தீவிரப்படுத்தி வரும் நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடி, சின்னத்தை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். “கட்சிக்கான கொடியாக மட்டும் இதை நான் பார்க்கவில்லை, தமிழ்நாட்டின் வரும்கால தலைமுறை வெற்றிக்கான கொடியாகப் பார்க்கிறேன்,” என்று பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழை (ஆகஸ்ட் 22) காலை நடைபெற்ற அறிமுக விழாவில் கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்து பேசிய விஜய் தெரிவித்தார்.
சிவப்பு, மஞ்சள் ஆகிய இரண்டு நிறங்களுடன் இரு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் “தமிழன் கொடி பறக்குது... தலைவன் யுகம் பிறக்குது” எனத் தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டது.
பாடலில் அனைவருக்கும் புரியும்படியான எளிய தமிழ்ச்சொற்களால் பாடப்பட்டுள்ளது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளதாகவும், தமன் இசையமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள், விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், சோபா சந்திரசேகர், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.
“என் அரசியல் பயணத்தைத் தொடங்கி அதன் தொடக்கப் புள்ளியாக கட்சியின் பெயரை பிப்ரவரி மாதம் அறிவித்தேன். கட்சியின் முதல் மாநில மாநாட்டுகான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் தேதி அறிவிக்கப்படும்.
“இதுவரை நமக்காக உழைத்தோம், இனி வரப்போகும் காலத்தில் கட்சி ரீதியாக நம்மை தயார்ப்படுத்தி தமிழகத்துக்காகவும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும் நாம் எல்லாரும் சேர்ந்து உழைப்போம்,” என்று விஜய் கூறினார்.
இந்நிலையில், கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்கச் சொல்லி குஜன் சமாஜ் கட்சி கேட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் நீல நிறத்தில் யானை சின்னம் இடம்பெற்றிருக்கும். விஜய் கட்சிக் கொடியிலும் யானை சின்னம், இடம் பெற்றுள்ளதால் அதனை நீக்கியாக வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி புகார் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

