சென்னை: ஒருநாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) சென்னை சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தமிழக முதல்வர் விஜய், ஆளுநர் அர்லேக்கர், அமைச்சர் ஆனந்த், தலைமைச் செயலாளர் சாய்குமார், காவல்துறை உயரதிகாரி மகேஷ்குமார், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
சென்னையில் பிரதமர் மோடி சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தின் போரூர்-பூந்தமல்லி வழித்தடம் உட்பட ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.
விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் பிரதமர் மோடி காரில் போரூருக்குப் புறப்பட்டார். விமான நிலையத்திலிருந்து பரங்கிமலை ராணுவப் பயிற்சி வளாகம்வரை அவர் திறந்தவெளி வாகனத்தில் சென்றார். சாலையின் இருபுறமும் இருந்த ஏராளமான பாஜகவினர் கட்சி கொடிகளுடன் அவரை வரவேற்றனர்.
பின்னர் சென்னை பயணத்தின் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யுடன் சேர்ந்து புதிய மெட்ரோ பாதையில் அவர் பயணம் செய்தார்.
சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத் திட்டம் ரூ.4,900 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த வழித்தடம் 3.7 கிலோமீட்டர் நீளமுள்ள தனித்துவமான ஈரடுக்குக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. மேலும், இது, ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கத்திற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட சமிக்ஞை அமைப்புகளைக் கொண்டிருக்கும்.
சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி நிலையத்தையும் அவர் திறந்துவைத்தார். அங்குக் கருவில் இருக்கும் நிலை முதல் முதியோர் காலம் வரையிலான மனித வாழ்நாளை உள்ளடக்கி 100க்கும் மேற்பட்ட மனித மூளைகளை துல்லியத்துடன் முப்பரிமாண வரைபடங்களாக உருவாக்கும் உலகளாவிய அறிவியல் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் சென்னையில் உள்ள அருள்மிகு ஜலகண்டேசுவரர் திருக்கோயிலில் வழிபாடு செய்தார்.
சென்னையில் நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், பெட்ரோலியம், கல்வித் துறை சார்ந்த ரூ.13,000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார்.
