சென்னை: எதிர்க்கட்சியினர் மட்டுமன்றி புதிதாகக் கட்சி தொடங்குபவர்களும்கூட திமுகவை அழிக்க நினைக்கிறார்கள் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ளது தவெக.
“1970களில் முதல்வர் ஸ்டாலினின் குடும்ப ஆட்சிக்கு எதிராகவே எம்ஜிஆர் கலகம் செய்தார். அவர் நினைத்தது போலவே அவர்களது குடும்ப ஆட்சியை அகற்றியும் காட்டினார். வரும் 2026ல் இந்த வரலாறு மீண்டும் திரும்பும்.
“2026ல் ஸ்டாலினின் குடும்ப ஆட்சியைத் துடைத்தெறிந்துவிட்டு, ஜனநாயக ஆட்சியை விஜய் அமைப்பார்,” என்று தவெக கட்சியின் செய்தித் தொடர்பாளர் வீர விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.
விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தனது கட்சியின் முதல் மாநாட்டில் பேசிய விஜய், அரசியல் எதிரியென திமுகவை மறைமுகமாக விமர்சித்தார்.
விஜய்யின் இந்தப் பேச்சுக்கு திமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் மட்டுமே பதிலடி கொடுத்தனர்.
“நமது கட்சியைப் பற்றி குறை கூறாததால், அதிமுகவினரும் விஜய்யின் கட்சி குறித்து வாய்திறக்க வேண்டாம்,” என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
விஜய்யை பாஜகவின் ‘சி’ டீம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடுமையான விமர்சித்தார்.
இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் விஜய் குறித்து மறைமுகமாக விமர்சித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட திமுகவை அழிக்க நினைக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் பதிலளித்து நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை,” என்று கூறினார்.
இந்த விமர்சனத்திற்கு தவெக கட்சியின் செய்தித் தொடர்பாளர் வீர விக்னேஷ்வரன் கொடுத்துள்ள பதிலடியில், “முதல்வர் ஸ்டாலின் எங்கள் தலைவரைத் தரக்குறைவாக விமர்சித்து இருக்கிறார். இது துரதிருஷ்டவசமானது.
“தங்கள் குடும்ப ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள அரசியல் எதிரிகளைத் தரக்குறைவாகப் பேசுவது திமுகவின் மரபணுவில் இருக்கிறது. முதலமைச்சரின் பேச்சும் அதைத்தான் காட்டுகிறது.
“2026ல் இந்தக் குடும்ப ஆட்சியைத் துடைத்தெறிந்துவிட்டு, ஜனநாயக ஆட்சியை விஜய் அமைப்பார்,” என்று தெரிவித்துள்ளார்.