சென்னை: விஜயகாந்த் நினைவு தின அமைதிப் பேரணிக்கு காவல்துறையின் தடையை மீறி சனிக்கிழமை (டிசம்பர் 28) தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் அக்கட்சியினர் பேரணி நடத்தினர். இதனால் கோயம்பேடு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை குருபூஜையாக அனுசரிக்கப்படுகிறது.
அதையொட்டி, நடந்த பேரணியில் பிரேமலதா தனது கையில் ஜோதி ஏந்தி வந்தார். நினைவிடத்தில் ஜோதி வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த், மகன்கள் சண்முகபாண்டியன், விஜய பிரபாகரன், மைத்துனர் சுதீஷ், ஆயிரக்கணக்கான தேமுதிக தொண்டர்களும் பேரணியில் கலந்து கொண்டனர்.
தேமுதிக நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, “போக்குவரத்து காரணங்களால் தேமுதிக அமைதி பேரணிக்கு தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் விஜயகாந்திற்கு நான் அஞ்சலி செலுத்த வந்துள்ளேன்,” என்றார்.
“அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும்கூட பேரணி அவர்கள் விரும்பியபடியே அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. விஜயகாந்தும், அவரது குடும்பத்தினரும், தேமுதிக தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். அனுமதி மறுக்கப்பட்டதை ஊதிப் பெரிதாக்க வேண்டாம்,” என்றும் அவர் சொன்னார்.
விஜயகாந்த் நினைவிடத்தில் சனிக்கிழமை காலையிலிருந்து சீமான், ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள், திரையுலகினர், தேமுதிக தொண்டர்கள், பொது மக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
‘மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் - கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைவுகூர்கிறேன்’ என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், பதிவிட்டுள்ளார்.
தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் விஜயகாந்த் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த அடையாளம் கொண்டு கோலோச்சியவரும், தனது உயரிய மனிதநேயப் பண்புகளாலும், ஈகைப் பெருங்குணத்தாலும் தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றவருமான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், அன்புச் சகோதரர் விஜயகாந்தை நினைவுகூர்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.
பேரணிக்கு கடந்த டிசம்பர் 5ஆம் தேதி காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்ததாகவும், ஆனால், டிசம்பர் 27 மாலை தான் பேரணிக்கு அனுமதி மறுப்பு தொடர்பாக தகவலை காவல்துறை தெரிவித்தது. காவல்துறையினரிடம் மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பேரணிக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று தேமுதிக கூறியது.
முன்னதாக காவல்துறையினருக்கும் தேமுதிகவினருக்கும் இடையே சிறிய அளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடையை மீறி பேரணி நடத்தினால் கட்சியினரை கைது செய்ய பேருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் கைது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. சிறிய சலசலப்புக்குப் பின்னர் திட்டமிட்டபடி தேமுதிகவினர் பேரணி நடத்தினர். காவல்துறையினர் சூழ பேரணி அமைதியாக நடந்து முடிந்தது.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.