சென்னை: தேமுதிக முன்னாள் தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாளையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் விஜயகாந்தின் முழு உருவ வெண்கல சிலை திறக்கப்பட்டது.
சிலையைத் திறந்து வைத்த அவரது மனைவியும் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரேமலதா, தேமுதிக தலைமை அலுவலகம் இனி ‘கேப்டன் ஆலயம்’ என்று அழைக்கப்படும் என அறிவித்தார்.
அக்கட்சியின் யூ டியூப் சேனலும் தொடங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். காலை முதலே ஏராளமான தொண்டர்கள் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து பிரேமலதா, விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் தொண்டர்களைச் சந்தித்து வந்தனர். அப்போது, கூட்ட நெரிசல் காரணமாக சண்முகபாண்டியன் திடீரென மயக்கம் அடைந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொண்டர்கள் அதிக அளவில் இருந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்ட காரணத்தால் அவர் மயக்கம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மயக்கம் அடைந்த அவரை உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றனர்.
விஜயகாந்த்
தமிழ்சினிமாவிற்கு நடிகராக அறிமுகமாகி நூற்றுக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களில் நடித்து அரசியலிலும் தேமுதிக கட்சியைத் தொடங்கி வெற்றித் தடம் பதித்தவர் விஜயகாந்த்.
அரசியலில் நுழைந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தவர் விஜயகாந்த். நடிகராக வளர்ந்து வந்த காலத்திலேயே தனது ரசிகர் மன்றம் மூலம் மக்களுக்கான நலத் திட்டங்களில் அதிக அளவில் முனைப்புக் காட்டியவர். ஏழை மக்களின் தேவைகளை அறிந்து செயல்பட்ட அவர், தேவையான விஷயங்களுக்கு நிதியுதவி, நன்கொடை அளித்தல், இளைஞர்களுக்கான பல்வேறு முன்னெடுப்புகள், இலவசத் திருமணங்கள், விளையாட்டு அகாடமி என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவர்தனது பிறந்த நாளான ஆகஸ்ட் 25 ஆம் தேதியை வறுமை ஒழிப்பு தினமாகக் கடைப்பிடிக்க வலியுறுத்தினார்.
கடந்த 2006ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அவரது கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விஜயகாந்த் பிறந்தநாளில் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது பிறந்தநாளை ஒட்டி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை தேமுதிக கட்சி சார்பில் பிரேமலதா வழங்கி வருகிறார்.விஜயகாந்தின் பிறந்தநாளை ஒட்டி தமிழகம் எங்கும் அன்னதானம், மாணவர்களுக்கு நோட்டு, பேனா, மக்களுக்கு இனிப்புகளை தேமுதிக கட்சியினர் வழங்கி வருகின்றனர்.
தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே’ என்ற கோட்பாட்டின் வழி வாழ்ந்த மனிதநேயப் பண்பாளர், தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனி இடத்தைக் கொண்டவர், தேமுதிக நிறுவனத் தலைவர், மறைந்த அன்புச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில், திரை வாழ்விலும் பொதுவாழ்விலும் அவர் நிகழ்த்திய சாதனைகளை நினைவுகூர்கிறேன்” என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
“தமிழ் சினிமாவில் உள்ள எளிய கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கைகள் மேற்கொண்டவர். தனது சமுதாய சேவைகளின் மூலம் நம்மிடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ‘பத்ம பூஷன் விஜயகாந்த்’ அவர்களின் பிறந்த தினத்தில் நினைவு கூர்வோம்” என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
“திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனி இடம் பிடித்திருந்தவர். நேர்மையும் துணிச்சலும் உடைய தலைவராக விளங்கியவர். எளிய மக்கள் மீது பேரன்பு கொண்டிருந்த பண்பாளர், அமரர் கேப்டன் விஜயகாந்த் புகழ் என்றும் நிலைத்திருக்கும்,” என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த். ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகளை அவரது பிறந்த நாளில் போற்றுகிறேன்,” என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நினைவுகூர்ந்துள்ளார்.