ஈரோடு: தவெக தலைவர் விஜய் எதிர்வரும் 18ஆம் தேதி ஈரோட்டில் நடக்கும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அக்கட்சியின் மேற்கு மண்டல பொறுப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு அதிகாரிகளிடம் உரிய ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்று, விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
“தவெக தலைவர் விஜய் புதுவையில் பிரசாரம் மேற்கொண்ட பிறகு, மீண்டும் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார்.
“விஜய்தான் வருங்கால முதல்வர் என்பதை ஏற்றுக்கொண்டு, கட்சியில் இணைய வருபவர்களை வரவேற்போம் என்பன உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
“கூட்டணியில் யாரை இணைக்க வேண்டும் என்பது குறித்து தலைவர் முடிவு செய்வார்,” என்றார் செங்கோட்டையன்.
தவெக வருங்காலத்தில் அதிமுகவாக மாறிவிடும் என்று ஒருபோதும் தாம் கூறவில்லை என்றும் அதிமுகவைச் சேர்ந்த பலர் தவெகவில் இணைய வாய்ப்பு உள்ளது என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
“இப்போது நான் விருப்பப்பட்டு, தவெகவில் இணைந்துவிட்டேன். எம்ஜிஆர் காலத்திலேயே உயர்மட்டக் குழு உறுப்பினராக இருந்த அனுபவம் எனக்குண்டு. புதிதாக வந்தவர்கள் எல்லாம் என்னை நீக்க முடியாது. என்னை அரவணைத்துச் செல்லும் இயக்கத்தில் சேர்ந்ததில் எந்தத் தவறும் இல்லை,” என்றார் செங்கோட்டையன்.
எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இருந்ததுபோல், தற்போது தவெகவில் தாம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

