சென்னை: நடிகர் விஜய் தொடர்பான வருமான வரி வழக்குத் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
‘புலி’ திரைப்படத்தில் நடிக்கக் கிடைத்த வருமானத்தை மறைத்துவிட்டதாக விஜய் மீது வருமான வரித்துறை குற்றஞ்சாட்டியது. மேலும் அவருக்கு ரூ.1.5 கோடி அபராதமும் விதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடுத்திருந்தார்.
தற்போது இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
ஏற்கெனவே கரூர் துயரச்சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்கொண்டுள்ளார் விஜய். இந்நிலையில் வருமான வரித்துறை வழக்கு புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.
கடந்த 2015-16ஆம் நிதியாண்டுக்கான வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்தபோது தனது வருமானம் ரூ.35.40 கோடி என்று விஜய் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் அவரது வருமான வரிக் கணக்கறிக்கை ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது.
இதில், ‘புலி’ என்ற படத்தில் நடித்ததற்காக தாம் பெற்ற சம்பளத்தை விஜய் கணக்கில் காட்டவில்லை எனத் தெரிய வந்தது.
தொடர்புடைய செய்திகள்
வருமானத்தை மறைத்ததற்காக, கடந்த 2022ஆம் ஆண்டு விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
வருமான வரித்துறையின் இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை அணுகினார் விஜய். அவரது மனுவைப் பரிசீலித்த நீதிமன்றம், அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இறுதிக்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், இருதரப்பு வாதங்களையும் செவிமெடுத்த நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.


