பெரம்பூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதிக்காகத் தாக்கல் செய்திருந்த தனது வேட்புமனுவில் கூடுதல் தகவல்களுடன் திருத்தப்பட்ட உறுதிமொழி ஆவணத்தைத் தற்போது சமர்ப்பித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார்.
கடந்த மார்ச் 30ஆம் தேதி பெரம்பூரில் தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில், தன் மீது எந்தக் குற்றவழக்குகளும் இல்லை என்று விஜய் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கு விவரங்கள் சேர்ப்பு
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் தன்மீதான இரண்டு வழக்குகள் குறித்து குறிப்பிட்டிருந்த விஜய், பெரம்பூர் தொகுதிக்கான மனுவிலும் அந்த வழக்கு விவரங்களை இணைத்து திருத்தப்பட்ட உறுதிமொழி ஆவணத்தைத் தற்போது தாக்கல் செய்துள்ளார்.
சொத்து மதிப்பில் மாற்றம்
விஜய்யின் சொத்து மதிப்பிலும் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, விஜய்யின் கைப்புழக்கத்தில் இருந்த ரொக்கப் பணம் ரூ.2 லட்சத்தில் இருந்து ஒன்றேகால் லட்ச ரூபாயாகக் குறைந்துள்ள நிலையில், ரூ.6.25 கோடி மதிப்பிலான பிரசார வாகனம் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, முன்னர் ரூ.404 கோடியாகக் குறிப்பிடப்பட்டிருந்த அவரது மொத்த அசையும் சொத்து மதிப்பு தற்போது 410 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும், அவரது மனைவி சங்கீதா பெயரிலுள்ள 2 கிலோ வெள்ளியின் மதிப்பு 25,000 ரூபாயிலிருந்து 4.75 லட்சம் ரூபாயாகத் திருத்திக் குறிப்பிடப்பட்டுள்ளது.

