சென்னை: தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணம் 2026 ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதியுடன் விஜய் தமது சுற்றுப்பயணத்தை முடிக்கவிருந்தார். இப்போது 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதிவரை சுற்றுப்பயணம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தந்தி உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், சனிக்கிழமைகளில் மட்டும் அவர் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், வரும் நாள்களில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிரசாரம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் திரையிலகில் முன்னணி நடிகராகப் பெயர் பதித்த விஜய் தவெகவைச் கடந்த ஆண்டு தொடங்கினார். அதன் பின்னர் விக்கிரவாண்டியில் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி அதன் முதல் மாநில மாநாடு நடைபெற்றது.
தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த மாதம் 21ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை விஜய் நேரடியாக விமர்சித்தார். குறிப்பாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை விஜய் கடுமையாகச் சாடினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தேர்தலை மனத்தில் வைத்து, ‘உங்கள் விஜய் நான் வரேன்’ எனக் குறிப்பிட்டு தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
தமது பிரசாரத்தை இம்மாதம் 13ஆம் தேதி திருச்சியில் தொடங்கிய விஜய், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் பிரசாரம் செய்து வருகிறார்.
கடந்த இரண்டு வாரங்களில் திருச்சி, அரியலூர், நாகை மற்றும் திருவாரூரில் மக்கள் சந்திப்புப் பயணத்தை நடத்தினார். வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 27) நாமக்கல், கரூர் மாவட்டங்களில் அவர் பிரசாரம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.