விழுப்புரம்: கள்ளச்சாராயக் கும்பலுடன் தொடர்பில் இருந்த ஆறு காவல்துறையினர் மீது கட்டாயப் பணி ஓய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, ஆறு பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு, விழுப்புரம் மாவட்டம், எக்கியார் குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய ஐம்பதுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 14 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இதையடுத்து, மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 8 பேர் உயிரிழந்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இதில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஆறு காவலர்களுக்கும் கள்ளச்சாராயக் கும்பலுடன் தொடர்பு இருப்பது உறுதியானது.
இதையடுத்து, ஆறு பேருக்கும் கட்டாயப் பணி ஓய்வு ஆணை பிறப்பித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை இயக்குநர் திஷா மிட்டல் உத்தரவிட்டார்.
இதுபோன்ற உத்தரவுகளுக்கு ஆளாகும் காவல்துறையினருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்கள் எதுவும் கிடைக்காது என்றும் குற்றத்தின் தன்மை, அதைச் செய்தவரின் வயதைப் பொறுத்து இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஓய்வு பெற்ற காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு தெரிவித்தார்.


