சென்னை: தமிழ்நாட்டில் 10,000 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்ட அறிவார்ந்த நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) திட்டங்களில் மிகப்பெரிய அளவில் நிதி விதிமீறல்களும் நிதி முறைகேடுகளும் நடந்துள்ளதாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 முதல் 2023 வரையிலான காலத்தில் சென்னை உள்ளிட்ட 11 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை ஆய்வு செய்ததில், மத்திய அரசின் நெறிமுறைகளை மீறி 1,602.20 கோடி ரூபாய் மதிப்பிலான 52 திட்டங்கள் கைவிடப்பட்டதும், அனுமதி பெறாத 44 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.
திருநெல்வேலியில் ஒதுக்கப்பட்ட நிதியில் 25.84 விழுக்காட்டுத் தொகை திட்டமிடப்படாத பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வளாகப் பசுமைக் கட்டடம், கோவை நேரு விளையாட்டு அரங்க ஒளிவிளக்குகள், மதுரைக் கருத்தரங்கு மையம் ஆகியவை அனுமதி பெறாமல் இத்திட்டத்தின்கீழ் கட்டப்பட்டவை எனத் தணிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், திருப்பூர் மாநகராட்சியில் எல்இடி தொலைக்காட்சிகள், கணினிகள் வாங்கவும், ஈரோடு, சேலத்தில் கழிவுநீர் அகற்றும் ஊழியர்களின் ஊதியத்திற்காகவும் அறிவார்ந்த நகர நிதி தவறாகச் செலவிடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் தொலைக்காட்சி, அதிகாரிகளுக்குச் சொகுசு கார்கள் வாங்கவும், மாநில அரசின் விளம்பரங்களுக்காகவும் நிதி திருப்பப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டில் விதிமுறைகளை மீறி 1,127 கோடி ரூபாய் நிதி மாநிலத் துறைகளின் தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை தவிர பிற நகரங்களில் முழுநேர தலைமைச் செயல் அதிகாரிகள் நியமிக்கப்படாமல், மாநகராட்சி ஆணையர்களே கூடுதல் பொறுப்புகளை வகித்ததும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளா் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

