தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லடாக்கில் பாஜக அலுவலகம், காவல்துறை வேனுக்குத் தீ மூட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள்

2 mins read
தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
1e270c8f-8d8e-4af1-8c50-d108a1ac44d5
ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறை வாகனத்துக்குத் தீ மூட்டினர். - படங்கள்: இந்திய ஊடகம்

லே: இந்தியாவின் லடாக் வட்டாரத்தைத் தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டங்கள் வலுத்துவருகின்றன.

தற்போது அது யூனியன் பிரதேசமாக உள்ளது.

அத்துடன், லடாக்கை அரசியலமைப்பின் 6வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் நிலையில் புதன்கிழமை (செப்டம்பர் 24), லே பகுதியில் காவல்துறைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

முன்னதாக, அவர்கள் லே நகரில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்குத் தீ மூட்டியதாகவும் கல்லெறிந்ததாகவும் கூறப்பட்டது.

காவல்துறை வேனுக்கும் அவர்கள் தீ மூட்டினர்.

சுற்றுப்புற ஆர்வலர் சோனம் வாங்சுக், கடந்த 14 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவு தெரிவித்து இளையர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் இந்தப் போராட்டங்களைக் காட்டும் படங்களும் காணொளிகளும் பரவிவருகின்றன.

லடாக் தலைவர்களுடன் இதன் தொடர்பில் அடுத்த சுற்றுப் பேச்சு வார்த்தை அக்டோபர் 6ஆம் தேதி நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சு செப்டம்பர் 20ஆம் தேதி கூறியது.

தனி மாநிலமாக அறிவிக்கக் கோரும் கார்கில் ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் சாஜட் கார்கிலி, “லேயில் நடக்கும் வன்செயல்கள் துரதிர்ஷ்டவசமானவை. அமைதி நிலவிய லடாக்கில் மத்திய அரசாங்கத்தின் போக்கால் சினமும் பாதுகாப்பின்மையும் நிலவுகிறது,” என்று தமது எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளார். பொதுமக்கள் அமைதி காக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

லடாக்கில் வன்முறை வெடிப்பது இது முதன்முறையன்று.

யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து 2019ஆம் ஆண்டும் கார்கில் பகுதியில் மிகப் பெரிய போராட்டம் நடந்தது. தங்கள் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்கும் கோரிக்கையுடன் குடியிருப்பாளர்கள் ஆர்ப்பட்டங்களில் ஈடுபட்டனர்.

சென்ற ஆண்டு (2024) பௌத்த, முஸ்லிம் சமயத் தலைவர்கள் இணைந்து போராட்டம் செய்தனர்.

தற்போது, லே ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் வியாழக்கிழமை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்