கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்துக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்துக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

படம்: வரலாற்று ஆய்வுக்கான பாண்டிய நாடு நிலையம்

09 Mar 2025 - 12:57 pm

2 mins read

மதுரை: மதுரைக்கு அருகே உள்ள கீழடியில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஒன்பது கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன.

இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் அங்குள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதை சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பார்த்து வருகின்றனர். ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்த இடத்தில் கூடாரம் அமைத்து அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்துக்கு வருபவர்கள் இங்கு வந்து செல்வதுண்டு. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடந்த ஜனவரி மாதம் ரூ.17.80 கோடியில் (2.72 மில்லியன் வெள்ளி) கீழடியில் அகழாய்வு நடந்த இடத்திலேயே 5,914 சதுர மீட்டர் பரப்பளவில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கக் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரியகருப்பன் ஆகியோர் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளைத் தொடங்கி வைத்தனர். அன்று முதல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத் தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்த இடங்களை முதலில் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்துள்ளனர். அதன்படி கீழடி அகழாய்வுத் தள இயக்குநர் ரமேஷ், இணை இயக்குநர் அஜய் ஆகியோர் தலைமையில் தொல்லியல் ஆய்வு மாணவர்கள், 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பொதுப்பணித்துறை சார்பில் திறந்தவெளி அருங்காட்சியகத்தில் பணிகள் நடந்து வருவதால் பாதுகாப்பு கருதி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கீழடி அருங்காட்சியகத்துக்கு செல்ல வழக்கம்போல அனுமதி உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்