செங்கல்பட்டு: தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
இதில் பலரும் பல்வேறு சாதனைகள் படைத்துள்ள நிலையில், பார்வைக் குறைபாடுள்ள ஹர்ஷிதா என்ற மாணவி, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 486 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் இணையம் வழி ஒலிப்புத்தகங்கள், ஆசிரியர்களின் உதவியுடன் படித்து தமிழில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.
செங்கல்பட்டைச் சேர்ந்த ஹர்ஷிதா, உதவியாளர் துணையுடன் தேர்வு எழுதினார்.
ஹர்ஷிதாவின் தாத்தா தமிழ் பண்டிதர் என்பதால், இயல்பாகவே தமக்கும் தமிழில் ஆர்வம் அதிகம் என்கிறார்.
தனது பள்ளிப் பாடங்களை இணையம் வழி பதிவிறக்கம் செய்து, ஆவணங்களாக மாற்றி, பின்னர் எழுத்தில் இருந்து குரல் வடிவமாக மாற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படித்ததாகக் கூறுகிறார் ஹர்ஷிதா.
இவரது பெற்றோரும் சகோதரர்களும் பல வகையில் உதவியுள்ளனர். தேர்வு சமயம் தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து படித்துள்ளார். தனது வெற்றிக்கு கைப்பேசி செயலி முக்கியப் பங்கு அளித்ததாகச் சொல்லும் ஹர்ஷிதா, கணக்குப் பதிவியல் பாடத்தின் வடிவமைப்பையும் வரைபடங்கள் வரைவதையும் கற்றுக்கொள்வதில் ஆரம்பத்தில் சிரமம் இருந்ததாகக் கூறுகிறார்.
“ஆசிரியர்களுடன் பலமுறை பயிற்சி செய்த பிறகு அதிலும் தேர்ச்சி பெற்றேன். தமிழில் நூற்றுக்கு நூறு பெற்றது எதிர்பாராத ஒன்று,” என்று தெரிவித்துள்ள ஹர்ஷிதா, ஆறு வயதில் பார்வை நரம்பு அழற்சியால் (optic neuritis) பாதிக்கப்பட்டு, தனது பார்வையை படிப்படியாக இழந்துவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
எனினும் பார்வையை இழப்பதற்கு முன்பே சாதாரண பள்ளியில் அடிப்படைக் கல்வியைக் கற்றிருந்தார் என்பதால், அங்கேயே தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்திருந்தனர் பெற்றோர்.
தனக்கு குண்டு எறிதல் போட்டியில் ஆர்வம் இருப்பதாகவும் எதிர்காலத்தில் ஐஏஎஸ் தேர்வெழுதி ஆட்சியாளராக வேண்டும் என்பதே லட்சியம் என்றும் கனவுகளோடு கூறியுள்ளார் ஹர்ஷிதா.

