சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்காக 1,005 பணியாளர்கள் முதற்கட்டமாக குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இத்தகவலை மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் வெளியிட்டார்.
சட்டமன்றத் தொகுதி வாரியாக கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி சென்னை மாநகராட்சியின் தலைமையகமான ரிப்பன் கட்டட வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அப்போது, வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனை, அறிவுரைகளை திரு குமரகுருபரன் வழங்கினார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன. சென்னையில் உள்ள ஆர்.கே.நகர், திருவிக நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் லயோலா கல்லூரி மையத்திலும், விருகம்பாக்கம், சைதை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளின் இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்திலும் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருபத்து நான்கு மணி நேரமும் அம்மையங்களைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபடும் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 1,005 பேர் முதற்கட்டமாக கணினி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

