தஞ்சாவூர்: வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்திச் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை (Voter ID) வாக்குச்சாவடி அலுவலரிடம் காண்பித்து வாக்களிக்கலாம் என்றார்.
வாக்காளர் அடையாள அட்டை கைவசம் இல்லாதவர்கள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கீழ்க்கண்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்துத் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றலாம்.
அங்கீகரிக்கப்பட்ட 12 மாற்று ஆவணங்கள்
ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் நூறுநாள் பணி அடையாள அட்டை, வங்கி அல்லது அஞ்சலகங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகங்கள், மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஓட்டுநா் உரிமம், பான் அட்டை, தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுத் திட்டத்தின்கீழ் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள அட்டை, இந்தியக் கடப்பிதழ், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசு, பொதுத் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, மக்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற மேலவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஓர் ஆவணத்தை வாக்காளர்கள் வாக்குச்சாவடி அலுவலரிடம் காண்பித்துத் தங்களது வாக்கைச் செலுத்தலாம்.
“வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள அனைத்து வாக்காளர்களும் தடையின்றி வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையில் இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது,” என்று ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

