தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹரியானாவில் வாக்குப் பதிவு:பாஜக, காங்கிரஸ் கடும் போட்டி

2 mins read
943b0e59-e8ee-46e3-8f77-c1319974a12c
இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தொண்டர் ஒருவர் கட்சித் தோரணத்தைக் கட்டுகிறார். ஹரியானா மாநிலத்தில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே போட்டி வலுத்துள்ளது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

புதுடெல்லி: ஹரியானாவில் 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை காலை 7.00 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

இம்மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தற்போது முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது

இந்தத் தேர்தலில், 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில், முதல்வர் நயாப் சிங் சைனி, எதிர்க்கட்சித் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா, லோக்தளம் தலைவர் அபய்சிங் சவுதாலா உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள்.

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தும் நட்சத்திர வேட்பாளராக களத்தில் இருக்கிறார். ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு ஓய்வை அறிவித்த இவர், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், குருக்ஷேத்ரா தொகுதி பாஜக எம்.பி.நவீன் ஜிண்டால் தமது தொகுதிக்குட்பட்ட வாக்குப் பதிவு மையம் ஒன்றில் வாக்களிக்க குதிரையில் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நவீன் ஜிண்டால், “மக்களிடையே பெரும் ஆர்வமும், எழுச்சியும் இருக்கிறது. ஹரியானா மாநில மக்கள் நிச்சயம் பா.ஜ.,வை அரியணையில் அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார்.

இதற்கிடையே பிரதமர் மோடி, “ஜனநாயகத்தின் புனிதமான திருவிழாவில் பங்கேற்று வாக்களித்து புதிய சாதனை படைக்குமாறு வாக்காளர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இத்தருணத்தில், முதன்முறையாக வாக்களிக்க உள்ள அனைத்து மாநில இளம் நண்பர்களுக்கும் எனது சிறப்பு வாழ்த்துகள்,” என்று கூறியுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “ஹரியானா வாக்காளர்கள் விவசாயிகள், வேலைவாய்ப்பின்மை, பெண்கள் உரிமைகள் போன்ற பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, இந்த முக்கியமான தேர்தலில் பெருமளவில் பங்கேற்று காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹரியானா முழுவதும் 20,629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

ஹரியானா சட்டசபைத் தேர்தலில், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.

லோக்தளம்-பகுஜன் சமாஜ் கட்சி, ஜனநாயக ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிடுகின்றன.

இந்த மாநிலத்தில் இரண்டு முறை ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பாஜக 3வது முறையாக வெற்றி பெறும் முனைப்புடன் செயல்பட்டுள்ளது.

ஹரியானாவில் கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தோரணங்களுக்கு இடையே மாடுகள் புகுந்து செல்கின்றன. இம்மாநிலத்தில் பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைக் கைப்பற்றும் தீவிரத்தில் இருக்கின்றன.
ஹரியானாவில் கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தோரணங்களுக்கு இடையே மாடுகள் புகுந்து செல்கின்றன. இம்மாநிலத்தில் பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைக் கைப்பற்றும் தீவிரத்தில் இருக்கின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்
ஹரியானாவில் வாக்களித்த பெருமையில் பெண்கள்.
ஹரியானாவில் வாக்களித்த பெருமையில் பெண்கள். - படம்: ஹரியானா மாநில தேர்தல் ஆணையம்
குறிப்புச் சொற்கள்