வால்கிரீன்ஸ் திறன் மையம்: முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்

வால்கிரீன்ஸ் திறன் மையம்: முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்

படம்: தினமணி

18 Sep 2026 - 9:22 pm

2 mins read

சென்னை: அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் அமைக்கும் உலகளாவிய திறன் மையத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்புத் துறை சார்பில் இதற்கான சிறப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) நடைபெற்றது.

தமிழ்நாடு அரசால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஓஎம்ஆர் வழித்தடத்தில் அமைந்துள்ள டிஎல்எப் தரமணி வளாகத்தில் வால்கிரீன்ஸ் நிறுவனம் தனது மையத்தை அமைக்கவுள்ளது.

இம்மையம் முதலாம் ஆண்டில் 250 பேருக்கு உயர்மதிப்பு வேலைவாய்ப்புகளை வழங்குவதோடு, வரும் ஆண்டுகளில் விரிவாக்கம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலகளவில் முன்னணி சுகாதார, மருந்தகச் சேவை நிறுவனமாக விளங்கும் வால்கிரீன்ஸ், நுகர்வோர் சுகாதாரப் பொருள்கள் துறையிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

தொழில்நுட்பம், வணிகச் சேவைகளை மையமாகக் கொண்டு அமையவுள்ள இம்மையம், இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழ்நாட்டில் அமைக்கப்படுகிறது.

ஜிசிசி துறையில் உயர்மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தமிழ்நாடு அரசின் கொள்கைக்கு இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மேலும் ஊக்கமளிப்பதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், தமிழ்நாடு உலகளாவிய தொழில்நுட்ப, வணிகச் சேவை மையமாக உருவெடுத்து வருவதை இம்மையத்தின் வருகை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

இந்நிகழ்வின்போது பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டின் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த இளையர்களுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதன் மூலமாக மாவட்ட அளவிலான இளையர்களின் தொழில்சார் திறன்களும் வேலைவாய்ப்புகளும் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்வில் தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, தலைமைச் செயலாளர் மு. சாய்குமார் மற்றும் வால்கிரீன்ஸ் நிறுவனப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அரசு உயர் அலுவலர்கள் மற்றும் வர்த்தகத் துறை அதிகாரிகள் பலரும் இச்சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டதாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்