சென்னை: தமிழகத்தில் ஏறக்குறைய 1,900 ஏரிகளில் நீர் இருப்பு குறைந்துவிட்டதால் பாசனப் பணிகளிலும் குடிநீர் விநியோகத்திலும் சிக்கல் ஏற்படக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, தமிழக குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சி அமைப்புகளின் உதவியோடு கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு நீர் எடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் பருவ மழை நன்றாகப் பெய்தாலும், பாசனத்துக்கும் குடிநீர் விநியோகத்துக்கும் ஏரிகளில் போதுமான நீர் இருப்பின்றி சிக்கல் ஏற்படுகிறது.
கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை வெளுத்துக் கட்டியதால் இயல்பைவிட அதிக மழைப்பொழிவு பதிவானது. வடகிழக்குப் பருவமழையும் ஏமாற்றம் அளிக்காமல் இயல்பான அளவில் பெய்தது.
எனினும், மாநிலத்திலுள்ள பல அணைகள், ஏரிகள் முழுமையாக நிரம்பவில்லை என்றும் மொத்தமுள்ள 224 டிஎம்சி கொள்ளளவு கொண்ட தமிழக அணைகளில் தற்போது 143 டிஎம்சி மட்டுமே இருப்பு உள்ளது என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மொத்தம் 14,000 பாசன ஏரிகள் உள்ளன. இவற்றுள் ஏறக்குறைய 2,900 ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளன. தர்மபுரி, திண்டுக்கல், கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் 270 ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன.
மேலும் தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், பெரம்பலூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களில் 1,670க்கும் மேற்பட்ட ஏரிகளில் போதிய நீர் இருப்பு இல்லை என்றும் பிப்ரவரி மாதத்துக்குள் இந்த ஏரிகளும் வறண்டுவிடும் என்றும் கூறப்படுகிறது.
இதனால் அணைகள், ஏரிகள், நீர் இருப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் பாசனப் பணிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வெளியான தகவல் விவசாயிகளுக்கு கவலை அளித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதிலும் சிக்கல் ஏற்படக்கூடும் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

