சென்னை: தமிழகத்தில் நடிகர் விஜய் முதல் முறையாக நடத்தும் கட்சி மாநாட்டால் விக்கிரவாண்டி திணறியது.
இந்த நிலையில் அவரது தவெக மாநாடு குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
“நாங்கள் எங்கள் கட்சி கொடியில் புலி வைத்துள்ளோம். விஜய் யானையை வைத்துள்ளார். கூட்டணி குறித்து தம்பி தான் முடிவு எடுக்க வேண்டும். அரசியல் கட்சியை துவஙகும்போது மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நான் வரும் போதும், இவ்வளவு ஆதரவு இல்லை,” என்று சீமான் கூறினார்.
த.வெ.க., மாநாட்டிற்கு செல்லும் கூட்டம் விஜய்யை பார்ப்பதற்காகத்தான் செல்கிறது. இந்த மக்கள் கூட்டம் வாக்குகளாக மாறாது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவரை பார்ப்பதற்கே கூட்டம் வரட்டும். கூட்டம் வருது, வரவில்லை அதை பத்தி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்றார் அவர்.
த.வெ.க., மாநாட்டில் வைக்கப்பட்டுள்ள ‘கட் அவுட்’ குறித்து கேட்டதற்கு, அரசியல் என்பது ‘கட் அவுட்’ வைப்பது அல்ல, கருத்தியலே அரசியல். நீங்கள் வேலுநாச்சியார், அம்பேத்கர் ஆகியோரை கட் அவுட்டில் வைப்பது முக்கியமில்லை. அவர்களது புகழை முன்னெடுத்து செல்ல வேண்டும்,” என்று சீமான் வலியுறுத்தினார்.