சென்னை: தமிழகத்தை வறுமை இல்லாத மாநிலமாக திமுக அரசு மாற்றியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கம்பனின் கனவு நனவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பன் கழகம் சார்பாக, சென்னையில் நடைபெற்ற விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘கவிச்சக்கரவர்த்தி கம்பர்’ விருது வழங்கப்பட்டது.
அயோத்தி நகரின் பெருமையைச் சொல்லும் போதும்கூட, காவிரி நாட்டோடு ஒப்பிட்டவர் கம்பர் என்றும் அரசர்களின் பெயர்களை, தமிழில் மொழி பெயர்த்தவர் கம்பர் என்றும் நிகழ்ச்சியில் பேசும்போது ஸ்டாலின் கூறினார்.
அண்ணா முதல்வராக இருந்த போதுதான், சென்னை மெரினா கடற்கரையில் கம்பருக்குச் சிலை வைக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
“வறுமை இல்லாத, சமூக வளர்ச்சி குறியீடுகளில் முன்னணியாக, பொருளியல் வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. இதுதான் கம்பர் கண்ட கனவு. இத்தகைய மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதும் கம்பருக்கு ஆற்றும் தொண்டுதான்.
“கம்ப ராமாயணத்தை மாறுபட்ட கோணத்தில் பார்த்தது திராவிட இயக்கம். சில கருத்துகளுக்காக விமர்சித்தாலும், அதன் தமிழுக்காகவும் கவிதைக்காகவும் பாராட்டிய இயக்கம் திமுக,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.