கடந்த ஆண்டு இந்தியாவில் பல்வேறு மொழிகளில் 1,700க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரைகண்டன. இவற்றுள் தமிழில் தயாரிக்கப்பட்ட படங்களின் எண்ணிக்கை மட்டும் 300ஐ தாண்டும் என்கிறது தினத்தந்தி ஊடகச் செய்தி.
இந்தியாவில் அதிக வசூல் கண்ட திரைப்படங்களின் பட்டியலில், ‘தங்கல்’ இந்திப் படம் ஏறக்குறைய ரூ.2,000 கோடி (S$310 மில்லியன்) வசூலுடன் முதல் இடத்தில் உள்ளது.
இந்தியா என்றால் இந்திப் படங்கள் என்ற பிம்பத்தை அண்மைக் காலங்களில் மாற்றி அமைத்தவர் இயக்குநர் ராஜமவுலி எனலாம்.
தெலுங்கில் அவர் இயக்கிய ‘பாகுபலி’ திரைப்படம் ஏறக்குறைய ரூ.1,800 கோடி வசூல் கண்டு உலகின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து, அவர் இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படமும் ரூ.1,200 கோடி வசூல் பெற்று, உலகத் திரை ரசிகர்களின் புருவத்தை உயர்த்த வைத்தது. கன்னடப் படம் ‘கேஜிஎஃப்’ ரூ.1,300 கோடி வசூல் கண்டதாகக் கூறப்படுகிறது.
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரு பாகங்களும் சேர்ந்து ஏறக்குறைய 800 கோடி ரூபாய் வசூல் தந்து தமிழ் ரசிகர்களுக்கு, ‘அப்பாடா, நம்மையும் பட்டியலில் சேர்த்துக்கொண்டனர்’ என்று ஆறுதல் அளித்தது.
ஆனால், மலையாளத் திரையுலகில் இருந்து எந்தவிதச் சத்தத்தையும் காணோம். மலையாள ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருப்பார்கள் என நினைத்தீர்கள் எனில் அது தவறு.
‘கடவுளின் சொந்த நாடு’ எனக் குறிப்பிடப்படும் கேரளாவில் உருவாகும் பல திரைப்படங்கள் உலக சினிமா தரத்தில் உள்ளன என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
அங்கு ஐந்து கோடி ரூபாய்க்குள் ஒரு படத்தை எடுத்து முடிக்கிறார்கள். நல்ல கதை, கதைக்களம், யதார்த்தமான நடிப்பு ஆகியவற்றால் அப்படங்கள் வெற்றி பெறுகின்றன. பெரும்பாலான படங்கள் வசூல் ரீதியில் தயாரிப்பாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்துவதில்லை.
தொடர்புடைய செய்திகள்
ஒரு கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படம் உலக அளவில் ரூ.70 கோடி வசூல் ஈட்டியுள்ளது. ஆனால், பிரம்மாண்ட படைப்புகளான ‘பாகுபலி’ (இரண்டு பாகங்கள்) ரூ.430 கோடி, ‘பொன்னியின் செல்வன்’ (இரண்டு பாகங்கள்) ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரானவை.
ரூ.70 கோடி செலவில் எடுக்கப்பட்ட ‘தங்கல்’ இந்திப் படம் ரூ.2,000 கோடி வசூல் கண்டது.
ஓடிடி தளங்களின் எண்ணிக்கை அதிகரித்த பின்னர், கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான மலையாளப் படங்களை தமிழ் ரசிகர்களும் கண்டு ரசிக்கிறார்கள்.
ஆனால், தமிழ்த் திரைப்படங்களின் நிலவரம் அவ்வாறு இல்லை. முன்னணி கதாநாயகர்களின் ஊதியம், விநியோகிப்பாளர்களுக்கான லாபப் பங்கு போன்ற செலவுகளைக் கழித்துவிட்டால் தயாரிப்பாளர்களுக்கு பெரிய லாபம் கிடைக்க வாய்ப்பு இல்லை.
“தமிழ் படங்களின் தயாரிப்புச் செலவு குறையும் வரை, உலகத் தரத்திலான படங்களை நம்மால் அதிக எண்ணிக்கையில் உருவாக்க இயலாது,” என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.
சரி, எப்போது தயாரிப்புச் செலவுகள் குறையும்?
குறைந்த செலவில் உருவாகும் படங்கள் என்றாலே விநியோகிப்பாளர்களும் திரையரங்க உரிமையாளர்களும் அவற்றைப் புறக்கணித்துவிடுவார்கள் என்ற நிலைதான் முன்பெல்லாம் இருந்தது.
“ஆனால் இப்போது நிலைமை ஓரளவு முன்னேறி உள்ளது. ஐந்து கோடி ரூபாய் செலவில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘வாழை’ படம் இதுவரை ரூ.42 கோடியும், ரூ.5.5 கோடி செலவில் உருவான ‘லப்பர் பந்து’ இதுவரை ரூ.22 கோடியும் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இதில் ‘வாழை’ திரைப்படம் ஆஸ்கார் விருதுப் போட்டியில் பங்கேற்க இந்தியாவில் நடைபெற்ற தகுதிச்சுற்றில் பங்கேற்றது.
“2012ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியர் வெளியிட்ட ‘கூழாங்கல்’, சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதுப் போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.
“ஆஸ்கார் விருது கிடைக்காவிட்டாலும், பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய இந்தப் படம் உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். பல அனைத்துலக திரைப்பட விருதுகளையும் இப் படம் அள்ளியது.
“வெற்றிமாறனின் ‘விடுதலை’ படம் ஓர் அனைத்துலக விழாவில் திரையிடப்பட்டபோது, அதன் முடிவில் அரங்கில் இருந்தோர் ஏழு நிமிடங்களுக்கு இடைவிடாது கைதட்டினர்.
“கடந்த காலங்களில் ‘சேத்துமான்’ (ரூ.1 கோடி), ‘டிமான்டி காலனி’ (ரூ.2 கோடி), ‘கோலமாவு கோகிலா’ (ரூ.8 கோடி), ‘எல்கேஜி’ (ரூ.3.5 கோடி) உள்ளிட்ட பல படங்கள் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டு, தயாரிப்புத் தரப்புக்கு பலமடங்கு லாபத்தை அளித்திருக்கிறது,” என்கிறார்கள் திரைப்பட வர்த்தக வட்டாரப் பிரமுகர்கள்.
எதனால் தமிழில் தரமான படங்களை குறைந்த செலவில் தயாரிக்க முடியவில்லை?
“கதாசிரியர்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காததே இதற்கு ஒரு காரணம் என்கிறார் அரசியல் கட்சித் தலைவரும் முன்னாள் திரைப்பட இயக்குநருமான திரு. சீமான்.
“மலையாளத் திரையுலகில் கதாசிரியர்களுக்குத்தான் மற்றவர்களைவிட அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கதையைத் தேர்வு செய்த பிறகே இயக்குநர் ஒப்பந்தமாகிறார்.
“கதைக்கேற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் பின்னர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கதாநாயகனுக்கு ஏற்ற கதைகளை உருவாக்குவதில்லை. தற்போது தமிழிலும்கூட சில படங்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றி உருவாகின்றன. இது வளர்ச்சிக்கான அறிகுறி,” என்கிறார் திரு. சீமான்.
அறிகுறியாக மட்டுமல்லாமல், இதையே நல்ல நடைமுறையாகக் கருதிப் பின்பற்றாவிட்டால், தமிழ்த் திரையுலகம் மேலும் வீழ்ச்சியைத்தான் சந்திக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.