சென்னை: தேர்தலில் தோல்வியடைந்தாலும் தமிழகத்தில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி தொடர்ந்து செயலாற்றும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழகம் எனும் தாய் நிலத்தின் நலனுக்காகவும் உயர்வுக்காகவும் தொடர்ச்சியாக களப்பணியாற்றி, மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கபூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்,” என்று சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும், வெற்றிபெற்ற அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் அவர் வாழ்த்து கூறியுள்ளார்.
இதனிடையே, கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தோல்வி கண்டது. அப்போது தனது கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்கள் மத்தியில் பேசியபோது சீமான் கண்கலங்கியது தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
“சட்டப்பேரவைக்குள் செல்லவேண்டும் என்று எனக்கு விருப்பமில்லை. நாட்டை வெல்லாமல், ஒரு சில தொகுதிகளை வெல்வதில் ஒன்றும் ஆகப் போவதில்லை. ஆனாலும் வென்று உள்ளே போயிருக்கலாம். மக்களின் குரலாக ஒலித்திருக்கலாம். இது நம் தோல்வி அல்ல. மக்களின் தோல்வி,” என்று சீமான் பேசும் காட்சிகள் அக்காணொளியில் இடம்பெற்றுள்ளன.
இது சீமானை சீண்டிப் பார்க்கும் வேலை என அவரது ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

