சென்னை: அரசுப் பள்ளிகளைத் தனியாருக்குத் தத்துக்கொடுக்கவோ தாரைவார்க்கவோ அவசியம் இல்லை என்று தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் 500 அரசுப் பள்ளிகளைத் தனியார் பள்ளிகளுக்குத் தத்துக் கொடுப்பதாக தகவல் வெளியானது. இதற்கு, திமுக அரசின் கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனால், அத்தகவலில் உண்மையில்லை எனத் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் மறுத்துள்ளது.
“சிஎஸ்ஆர் திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு இருக்கும் என்றுதான் சொல்லப்பட்டதே தவிர, எந்த இடத்திலும் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுப்போம் என்று நாங்களும் சொல்லவில்லை. தத்துக்கொடுப்போம் என்று அமைச்சர் உள்ளிட்ட அதிகாரி பெருமக்கள் யாரும் சொல்லவில்லை,” என்று அச்சங்கம் விளக்கமளித்தது.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சர் அன்பில் மகேசும் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.
“500 அரசுப் பள்ளிகளைத் தனியார் பள்ளிகளுக்குத் தத்துக் கொடுப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை. நான் அப்படிப் பேசவில்லை.
“இவ்விவகாரத்தில் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தியவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். ‘நம்ம ஊரு, நம்ம பள்ளி’ என்று சொந்த ஊரில் உள்ள பள்ளிகளை மேம்படுத்தும் சிஎஸ்ஆர் திட்டத்தைத் தமிழக முதல்வர் ரூ.5 லட்சம் கொடுத்துத் தொடங்கி வைத்தார். அத்திட்டத்தின்படி, தனியார் பள்ளிகளும் 500 அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளன.
“இதற்காக, அரசுப் பள்ளிகளையே அவர்களிடம் ஒப்படைத்துவிட்டோம் என்று சொல்வதில் நியாயமில்லை. அரசுப் பள்ளிகளைத் தனியார் தத்தெடுப்பதாக நான் எங்கும் சொல்லவில்லை. அரசுப் பள்ளிகள் எங்கள் பிள்ளை. எங்கள் பிள்ளையை நாங்களே வளர்த்தெடுப்போமே தவிர, யாருக்கும் தாரை வார்க்கமாட்டோம்,” என்று திரு மகேஸ் உறுதி தெரிவித்தார்.