இனி கடற்கரையிலும் திருமணம் செய்யலாம்: தமிழக அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு

இனி கடற்கரையிலும் திருமணம் செய்யலாம்: தமிழக அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு

2 mins read
149fc0f0-4bbb-4098-a66e-bce5c8d846e8
‘பீச் வெட்டிங்’ எனப்படும் கடற்கரைத் திருமணத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. - படம்: செயற்கை நுண்ணறிவு/தினமணி

சென்னை: தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் திருமணங்களை நடத்த புதிய திட்டம் ஒன்றைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக சுற்றுலாத்துறை அறிமுகப்படுத்தும் இந்தத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பொதுவாக, வசதி படைத்தவர்கள் மட்டுமே கடற்கரைகளில் திருமணங்கள் நடத்துவர் என்றும் அவை ஆடம்பரமானவை என்றும் கருப்படுகிறது.

சாமானியர்களுக்கும் நடுத்த வர்க்கத்தினருக்கும் கடற்கரைத் திருமணம் என்பது வெறும் கனவாகவே இருந்தது.

தற்போது பத்தாயிரம் ரூபாய் இருந்தால் போதும். கடற்கரையில் திருமணத்தை நடத்த அனுமதி பெற்றுவிடலாம் என்பது தமிழக அரசின் புதிய திட்டம் சொல்கிறது.

தமிழகச் சுற்றுலாத்துறையின்கீழ் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உணவகங்கள் உள்ளன. அதேபோல் கோவில்கள், சுற்றுலா இடங்களுக்குச் செல்வதற்கும் ஏராளமான திட்டங்கள் உள்ளன.

இந்நிலையில், புதிதாக கடற்கரைத் திருமணம் நடத்தும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பெரும்பாலும் வசதியானவர்கள், சினிமா பிரபலங்கள் மட்டுமே இவ்வகை திருமணங்களை நடத்தி வந்தனர்.

‘பீச் வெட்டிங்’ எனப்படும் கடற்கரைத் திருமணத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள மாமல்லபுரத்தில் கடற்கரைத் திருமணங்களை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

விரைவில், கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நபருக்கான சைவ உணவு வழங்க ரூ.700, அசைவ உணவுக்கு ரூ.1,100 எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் விடுதியில் தங்குவதற்கான கட்டணம் ஓர் அறைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 ஆகும்.

மற்றபடி, மேடை அலங்காரங்கள், விளக்குகள் அமைப்பு, மணமக்களுக்கான ஒப்பனை உள்ளிட்ட மற்ற ஏற்பாடுகளை திருமண வீட்டாரே தனியாகச் செய்துகொள்ளலாம்.

இத்திட்டத்துக்கு இளையர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்