சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் 10 கலைஞர்களுக்குப் பொற்கிழியாக தலா ரூ.1 லட்சம் நிதியுதவியும், தமிழ் மொழியில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க 5 நூலாசிரியர்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அளிக்கப்பட்டது.
மேலும், தமிழில் புதிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய 5 நாடகக் கலைஞர்களுக்கு தலா 1.50 லட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் புதிய நாட்டிய நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றம் செய்ய 5 நாட்டியக் கலைஞர்களுக்கு தலா 1.50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.
அத்துடன், மறைந்த 20 கலைஞர்களின் மரபுரிமையினருக்கு குடும்பப் பராமரிப்பிற்காக தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (26.2.2025) வழங்கியதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


