தமிழக பள்ளிக் கல்வித் துறையில் என்னதான் நடக்கிறது?
இந்தக் கேள்விக்குத் தாம் அவ்வப்போது உரிய விளக்கங்களை அளித்து வருவதாகச் சொல்கிறார் அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ். தனது துறை செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களை அவர் பட்டியலிடுகிறார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள சுமார் 31,000 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் (லட்சக்கணக்கான) மாணவர்கள் பயனடைகின்றனர்.
காலை பள்ளிக்கு வந்ததும் சூடான, சுவையான சிற்றுண்டியை உண்டபிறகு அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடிகிறது. இந்தத் திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளையும் உள்ளடக்கும்போது கூடுதலாக 2.50 லட்சம் மாணவர்கள் பயனடைவர்.
இந்தத் திட்டத்துக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான தெலுங்கானா உள்ளிட்ட இந்திய மாநிலங்கள் மட்டுமல்லாமல், கனடா பிரதமரும் கூட இத்திட்டத்தை வரவேற்றுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தபோது, அங்கிருந்த சில குழந்தைகள் உணவின்றி பள்ளிக்கு வந்ததால் பசி வயிற்றைக் கிள்ளுகிறது என்று கூறியதைக் கேட்டபிறகே இத்திட்டத்தை அவர் செயல்படுத்தினார் என்கிறது ஆளும் திமுக தரப்பு.
இல்லம் தேடி கல்வித்திட்டம்:
கொரோனா காலகட்டத்தில் கற்றல் இடைவெளியைக் குறைக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமிது. இத்திட்டத்தின்கீழ் 24 லட்சம் குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இதற்காக 1.65 லட்சம் தன்னார்வலர்கள் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
எண்ணும் எழுத்தும் திட்டம்:
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் 2025ஆம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல், அடிப்படை எண்கணிதத் திறன்கள் ஆகியவற்றை அடைவதை உறுதி செய்யும் திட்டமிது.
ஏறக்குறைய 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதனால் பயனடைந்துள்ளனர்.
நுழை, நட, ஓடு, பற உள்ளிட்ட திட்டம் மூலம் குழந்தைகளுக்கு வண்ணப்படங்களுடன் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள 53 புத்தகங்கள் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இது குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருப்பதால் நல்ல பலன் கிடைக்கும் என பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. மேலும் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் திட்டம் உள்ளிட்ட மேலும் சில திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
தமிழக அரசுப் பள்ளிகளில் அதிவேக இணைய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 80,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு கைக்கணினிகள், மாணவர்களுக்கு நற்பண்புகளை வளர்க்கும் கதை நூல்களை வழங்குதல், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆசிரியர்களுக்கு தலைமைத்துவ விருது அளித்தல் என பள்ளிக் கல்வித்துறை மாதந்தோறும் ஏதேனும் ஆக்கபூர்வமான திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது என்பது உண்மைதான்.
பிறகு ஏன் ஒரு தரப்பினர் குறைபாட்டு பாடுகிறார்கள்?
சிக்கல்களுக்கு என்ன தீர்வு:
கடந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகத்தில் கல்வி நிலை குறித்த அறிக்கை வெளியானது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினருக்கு அடிப்படை எண், எழுத்தறிவு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
அதற்கு முந்தைய ஆண்டு பொதுத் தேர்வு முடிவுகளில் முதலிடம் பிடித்திருந்த அந்த மாவட்டத்தில் கல்வித்தரம் எப்படி இந்த அளவுக்குக் குறைந்தது என்ற கேள்வி பள்ளிக்கல்வித் துறைக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
அந்தத் துறை தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.
ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அரசாங்கத்திடம் போதிய நிதி இல்லை என்று ஒரு தரப்பினர் குறை கூற, 14,000 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளதை அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது.
மேலும் மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிதி உரிய நேரத்தில் கிடைக்கவில்லை என்பதையும் தமிழக அரசு மற்றொரு காரணமாக முன் வைக்கிறது.
கலை நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம்:
மாணவர்களுக்கு கல்வியறிவு மட்டுமே போதுமானதல்ல என்ற அடிப்படையில் கலை நிகழ்வுகளுக்கும் அரசுப் பள்ளிகளில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மாநிலத்தில் உள்ள பல்வேறு கலைவடிவங்கள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டுவர கலைத்திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
வட்டார, மாவட்ட, மாநில அளவில் மூன்று மாதங்களுக்கு கலைத் திருவிழாக்கள் ஆண்டுதோறும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரதநாட்டியம், சிலம்பம், நாட்டுப்புற பாடல், களிமண் பொம்மை, மணல் சிற்பங்கள் செய்தல், பலகுரல் பேச்சு, மாறுவேடம், கட்டுரை, ஓவிய, நடனப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதனால் மாணவர்கள் மத்தியில் உற்சாகம் நிலவுவது தெரியவில்லையா என்று கேட்கிறது ஆளும்தரப்பு. இதன்மூலம் கலையரசன், கலையரசி விருதுகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கலைப்போட்டிகளில் முதல் 25 இடங்களைப் பிடிக்கும் மாணவ மாணவியர் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.
இதுவரை சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு மாணவர்கள் இவ்வாறு சென்று வந்துள்ளனர்.
மேலும், கனவு ஆசிரியர் என்ற திட்டத்தின்கீழ் தேர்வு நடத்தப்பட்டு 54 ஆசிரியர்கள் குழு ஒன்று கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று திரும்பியுள்ளளது.
ஆசிரியர்கள் மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் சென்ற காலம் மாறி இன்று மாணவனான நான் ஆசிரியர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்வது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு என்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ்.
செயற்கை நுண்ணறிவுப் பாடத்திட்டம்:
தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் செயற்கை நுண்ணறிவுப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தபடும் என அரசு அறிவித்து இருக்கிறது.
இதற்காக ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளதாக துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். உலகம் எந்தத் திசையில் நகர்கிறதோ நாமும் அவ்வாறே செல்ல வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வடமாநில மாணவர்கள்:
மேலும் தமிழகத்தில் படித்து வரும் வடமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேரும் வகையில் அறிவுரை வழங்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பணியின் பொருட்டு தமிழகத்தில் குடியேறுகின்றனர். அவர்களது குழந்தைகள் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கின்றனர்.
குறிப்பாக, தமிழ் மொழியையும் கற்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் நிலையில் அரசுப் பள்ளிகளில் இம்மாணவர்களைச் சேர்ப்பதன் மூலம் அவற்றின் வளர்ச்சி வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.