தமிழக ஆளுநர் மூன்று ஆண்டுகளாக என்ன செய்துகொண்டிருந்தார்: உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி மூன்று ஆண்டுகளாக என்ன செய்துகொண்டிருந்தார் என்று உச்ச நீதிமன்றம் கடிந்துகொண்டது.

ஆளுநர் ரவி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

அம்மனு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, “இந்த மசோதாக்கள் கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து கிடப்பில் போடப்பட்டுள்ளன. தமிழக ஆளுநர் மூன்று ஆண்டுகளாக என்ன செய்துகொண்டிருந்தார்?” என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காட்டமாகக் கேட்டார்.

சென்ற வாரங்கூட ஆளுநர் ரவி பத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார். அவற்றில் இரண்டு மசோதாக்கள் முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவை.

இதனையடுத்து, இம்மாதம் 18ஆம் தேதி அவசரமாகக் கூடிய தமிழக சட்டமன்றம், அந்தப் பத்து மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி, ஆளுநருக்குத் திருப்பி அனுப்பியது.

தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகல் ரோகத்கியும் வில்சனும் முன்னிலையாகினர்.

“கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 13க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் கால தாமதம் செய்கிறார். எந்தக் காரணமும் கூறாமல் மசோதாக்களை அவர் நிராகரித்துள்ளார்.

“ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு வந்துகொண்டிருக்க முடியாது. சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினால் அதற்கான காரணத்தை ஆளுநர் கூற வேண்டும். மசோதா நிராகரிக்கப்படுவதாக வெறுமனே சொல்ல ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அவரது செயல்பாட்டால் எட்டுக் கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

அதனைப் பதிவுசெய்துகொண்ட தலைமை நீதிபதி, “2020 ஜனவரியில் இருந்து மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. மூன்று ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்துகொண்டிருந்தார்? நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் எப்போது ஒப்புதல் கொடுப்பார்? சட்டமன்றத்தில் 2வது முறையாக மசோதாக்களை நிறைவேற்றினால் அதை நிதி மசோதாபோல் கருதி ஒப்புதல் தர வேண்டும். சட்டமன்றத்தில் தவறான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டாலும் அதை நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.

“ஒரு மசோதாவை சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றினால் அதை அதிபருக்கு ஆளுநர் அனுப்பி வைக்க முடியுமா?. தற்போது என்ன செய்யப் போகிறார் ஆளுநர் என்பதை அறிய உச்ச நீதிமன்றம் காத்திருக்கிறது,” என்றார்.

அதற்குப் பதிலளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “அதிபருக்கு ஆளுநர் மசோதாவை அனுப்பி வைக்க முடியாது. மசோதாக்கள் பரிசீலிக்கப்பட வேண்டியுள்ளதால் அவகாசம் வழங்க வேண்டும்,” என்று கூறினார்.

இதனையடுத்து, வழக்கு டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!