சென்னை: தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் ஊழியர்கள், அதிகாரிகள் லஞ்சம் கேட்பது குறித்து புகார் அளிக்க ஒரு வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரி, ஊழியர்களின் பெயர், பதவி, அலுவலகம், லஞ்சம் குறித்த காணொளி, ஒலி அல்லது ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பலாம்.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம்.சாய் குமார் அனைத்து அரசுத் துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், இந்த வாட்ஸ்அப் எண் அனைத்து அதிகாரபூர்வ அரசு இணையத்தளங்களிலும், லஞ்ச ஒழிப்பு, கண்காணிப்புத் துறை இணையப் பக்கத்திற்கான இணைப்புடன் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் அனைத்து அலுவலகங்களிலும் ஊழலை ஒழிப்பதற்காக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
லஞ்சம் தொடர்பான புகார்களை மக்கள் லஞ்ச ஒழிப்பு, கண்காணிப்புத் துறைக்கு (டிவிஏசி) dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 044-22321090, 22321085, 22310989, 22342142 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் அல்லது 9498180936 என்ற வாட்ஸ்அப் எண் மூலமோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

